கல்வித்துறையில் மாதந்தோறும் ‘கப்பம்’ மண்டல கணக்கு அலுவலர் சிக்கினார்

மதுரையில் கல்வித்துறை கண்காணிப்பாளர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் வாங்கி வந்த கல்வித்துறை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை பிரிவு) பார்த்திபன் 55, நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கினார். அவரிடம் 2.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

மதுரை தல்லாகுளம் முதன்மை கல்வி அலுவலக வளாகத்திற்குள் கல்வித்துறை மண்டல கணக்கு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மூலம் மதுரை உட்பட 18 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பள்ளி மானியம், நிதி செலவினங்கள், ஆசிரியர்- மாணவர் நிர்ணயம் உட்பட பல்வேறு நிலைகளில் தணிக்கை நடத்தப்படும்.உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கை துறையின் உதவி இயக்குனர் அந்தஸ்திலுள்ள பார்த்திபன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பதவியில் உள்ளார். 

இவர், மதுரை மாநகராட்சி தணிக்கை துணை இயக்குனராக நேற்று பதவி உயர்வு பெற்றார்.இதையொட்டி கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் அவரை ‘மரியாதை நிமித்தமாக’ சந்தித்து வாழ்த்து கூறி பணக்கவர்கள் அளித்தனர். இத்தகவல் அறிந்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, கண்ணன், அம்புரோஸ், சூரியகலா உள்ளிட்டோர் பகல் 2:30 மணிக்கு சோதனை மேற்கொண்டனர். 

அப்போது 2.50 லட்சம் ரூபாய் அவரது மேஜையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.போலீசார் கூறியதாவது: இவருக்கு கீழ் உள்ள 18 கண்காணிப்பாளர்கள் தங்கள் மாவட்டங்களில் மாதந்தோறும் தணிக்கை செய்து அந்த அறிக்கையை மாதகடைசியில் பார்த்திபனிடம் கொடுப்பார்கள். அப்போது 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவரும் கொடுப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. நேற்றும் இதுபோன்று கவர் கொடுப்பதாக தகவல் வந்ததைதொடர்ந்து சோதனை மேற்கொண்டு, 2.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தோம். 

இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க உள்ளோம் என்றனர்.’வசூல் ராஜா’தணிக்கை பிரிவு அலுவலகத்தில் கணக்கு அலுவலர், ஒரு டைப்பிஸ்ட், 2 இளநிலை உதவியாளர் மட்டுமே பெரும்பாலும் பணியில் இருப்பர். கண்காணிப்பாளர்கள் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று பள்ளி தணிக்கையில் ஈடுபட்டு மாதக் கடைசியில் கணக்கு அலுவலரை சந்திக்க மதுரை வருவர்.அப்போது ஒவ்வொரு கண்காணிப்பாளரும் அந்த மாதத்திற்கான ‘கப்பத்தை’ கவர்களில் வைத்து கொடுக்க வேண்டும் என பார்த்திபன் பொறுப்பேற்றதும் நடைமுறைக்கு வந்தது.

பதவி உயர்வு பெற்ற பார்த்திபன் நேற்று இங்கிருந்து விடுவிக்கப்பட்டு துணை இயக்குனராக பதவியேற்பதற்கு முன் அவருக்கு ‘கப்பம்’ செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கப்பத்தில் அவர் கறார் காட்டியதால் அதிருப்தியடைந்த சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எத்தனை மணிக்கு ‘கப்பம்’ கட்டப்படும், எப்படி கொடுக்கப்படும் என்பதை முன்கூட்டியே தகவல் கொடுத்து விட்டனர். இதனால்தான் பார்த்திபன் சிக்கினார் என்கின்றனர் கல்வி அதிகாரிகள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here