2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!


சென்ற ஆண்டின் டிசம்பர் வரையிலான 16 மாதங்களில் இந்தியாவில் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள ஊழியர்களின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளைக் கணக்கிட்டு மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017 செப்டம்பர் முதல் 2018 டிசம்பர் வரையிலான 16 மாதங்களில் 1.96 கோடிப் பேர் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இணைந்துள்ளனர். அதேபோல, டிசம்பர் மாதத்தில் மட்டும் 7.16 லட்சம் பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017 டிசம்பரில் 2.37 லட்சமாக மட்டுமே இருந்தது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2017 செப்டம்பர் முதல் 2018 டிசம்பர் வரையில் புதிதாக 72.32 லட்சம் பேர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இணைந்துள்ளனர். 20 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல, நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேரும் நபர்களின் மாத ஊதியம் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யவேண்டும். அதேபோல, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மேற்கூறிய 16 மாதங்களில் பதிவுசெய்துள்ள நபர்களின் எண்ணிக்கை 9,66,381 ஆக உள்ளதாகவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here