ஏழை விவசாயிகளுக்கு ரூ.6,000: தமிழகத்தில் தொடக்கம்!


நாடு முழுவதும் சிறு குறு ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் தொடங்கி வைத்ததையடுத்து தமிழகத்திலும் முதல்வர் பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.

ஏழை விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தைப் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின்படி 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கிற 12 கோடி சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணையாக, தவணை ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதன்படி முதல்கட்டமாக இத்திட்டத்தில் பயன்படக்கூடிய ஒரு கோடி விவசாயிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் ஒருகோடி விவசாயிகள் கண்டறியப்பட்டு அடுத்த சில நாட்களில் முதல் தவணையாக ரூ.2,000 சுமார் 2 கோடி விவசாயிகளுக்கு செலுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் விவசாயிகளிடம் முதலைக்கண்ணீர் வடிப்பதாகக் குற்றம்சாட்டினார். மேற்கொண்டு அவர் பேசுகையில், “இதற்கு முந்தைய அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தன. ஆனால் அவை விவசாயிகளுக்கு உரிய அதிகாரம் அளிக்கவில்லை. விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களைச் சார்ந்தே வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினர்.

அதனால்தான் 2014ஆம் ஆண்டில் ஒருகட்சியை பெரும்பான்மை வெற்றியடையச் செய்தார்கள். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக நாங்கள் உறுதியாக உழைக்கிறோம். நான் இப்போது பேசிக் கொண்டிருக்கும்போதே 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,021 கோடி வரவு வைக்கப்பட்டுவிட்டது” என்றார்.

கோரக்பூரில் இத்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிறகு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த துவக்க விழாவில் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கலந்துகொண்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இவ்விழாவில் தமிழக முதல்வர் கே.பழனிசாமியும், பியூஷ் கோயலும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரையில் 13 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். முதல் தவணை பெறக்கூடிய நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலைவாணர் அரங்கில் கூடியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here