அத்தியின் மருத்துவப் பண்புகள்

அத்தியின் பால், பட்டை, இலை, காய், பழம் ஆகியவை மருத்துவப் பண்புகள் நிறைந்தவை.

மலச்சிக்கல் தீர மற்றும் நல்ல செரிமானத்திற்கு

அத்திப்பழத்தில் அதிக அளவு நார்சச்சத்து காணப்படுகிறது. இது செரிமானதிற்கு துணை புரிகிறது. உலர்ந்த இப்பழத்தின் 3 துண்டுகளில் 5 கிராம் நார்சத்து உள்ளது. இது அன்றாட நார்ச்சத்து தேவையில் 20 சதவீதம் ஆகும்.

மேலும் இப்பழத்தின் நார்ச்சத்தானது குடலியக்கத்தை சீர்செய்து மலச்சிக்கல் மற்றும் குடல்நோய் வராமல் தடுக்கிறது. இப்பழம் உடற்சூட்டினையும் நீக்குகிறது.

உலர்ந்த அத்திப்பழங்களை இரவு நீரில் ஊற வைத்து காலையில் நீரையும், பழத்தினையும் உண்ண மலச்சிக்கல் தீரும். இவ்வாறு 10-15 நாட்கள் செய்துவர உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் போன்ற நோய்கள் குணமாகும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க

நம் உடலின் உயர் இரத்த அழுத்தத்திற்கு நம் உணவில் உள்ள சோடியம் ஒரு காரணமாகும். இப்பழத்தில் உள்ள பொட்டாசியமானது உடலில் உள்ள சோடியத்தின் அளவினைக் குறைத்து உயர் இரத்த அழுத்தத்தைச் சீர்செய்கிறது.

அத்தியில் பீனால், ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்றவை காணப்படுகின்றன. இந்த கொழுப்பு அமிலங்கள் இதய நோய் வராமல் பாதுகாக்கின்றன. இப்பழமானது இதய நோய்க்கு காரணமான டிரைகிளிசரைட்டுகளின் அளவினை குறைத்து இதயத்தைப் பாதுகாக்கின்றன.

 

புற்றுநோய் பாதுகாப்பு

அத்திப்பழத்தில் அதிக அளவு வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கக் கூடிய ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் உள்ளன. எனவே இவை வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கின்றன. குடல், மார்பகம், கல்லீரல் போன்றவற்றை புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

 

எலும்புகளைப் பலப்படுத்த

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3 கிராம் கால்சியம் உள்ளது. இப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்குகிறது. மேலும் ஆஸ்டியோ போரோஸிஸ் என்ற எலும்பு நோயிலிருந்து பாதுகாக்கிறது. எலும்பு வளர்ச்சிக்கும், உடைந்த எலும்பினை சீர்செய்யவும் இப்பழம் உதவுகிறது.

 

சர்க்கரை நோயாளிகளுக்கு

இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியமானது மதிய உணவிற்குபின் உடல் உட்கிரகிக்கும் சர்க்கரையின் அளவினை குறைக்கிறது. இதனால் இப்பழமானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு அருமருந்தாகும்.

இரத்த விருத்திக்கு

இப்பழத்தில் காணப்படும் தாமிரச்சத்து இரத்த சிவப்பு அணு உற்பத்திக்கு முக்கியமானது. இப்பழத்தில் காணப்படும் இரும்புச் சத்து இரத்த சிவப்பு அணு உற்பத்தியை அதிகரிப்பதோடு உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவி செய்கிறது.

இரத்த சிவப்பணுக்களின் குறைவால் ஏற்படும் அனீமியாவை சரிசெய்து உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2 கிராம் இரும்புச் சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொண்டை வலி, வாய் துர்நாற்றம் குணமாக

இப்பழத்தில் காணப்படும் பிசின் போன்ற தன்மை தொண்டைப் புண்களை ஆற்றி தொண்டை வலியைக் குறைக்கின்றது. அத்திப்பழம் மற்றும் அதன் சாறு தொண்டைக்கட்டு மற்றும் ஓக்கல்காடில் உள்ள புண்களை ஆற்றும்.

அத்தியின் இலைகளை வாயில் போட்டு மென்று தண்ணீர் ஊற்றி வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

 

இனப்பெருக்க மண்டலங்களின் ஆரோக்கியம்

இப்பழம் கருவுறும் திறனை அதிகரிக்கவும், பாலுணர்வைத் தூண்டவும் செய்கிறது. இப்பழத்தில் காணப்படும் துத்தநாகம், மாங்கனீசு, மக்னீசியம் ஆகியவை இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.

 

முகப்பரு மற்றும் மருக்கள் நீங்க

அத்திப்பழத்தினை அப்படியே நசுக்கி சாறுடன் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருந்து பின் காய்ந்தவுடன் முகத்தினைக் கழுவ முகப்பரு நீங்கும்.

அத்திமரப்பால் மற்றும் இலைகளின் பாலினை மருக்கள் மீது தடவி வர அவை நாளடைவில் மறையும்.

 

அத்திப்பழத்தினை தேர்வு செய்யும் முறை

உலர்ந்த அத்திப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. புதிதான அத்திப்பழம் மே முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. புதிதான பழத்தினை வாங்கும்போது பழம் முழுவதும் பழுத்து மென்மையாகவும், நல்ல வாசனையுடனும் இருக்குமாறு வாங்க வேண்டும்.

காயம்பட்ட, மிகவும் மெதுவான, நோய்தாக்குதல் உள்ள பழங்களை தவிர்த்து விடவேண்டும். அத்திக்காயை வாங்கி உண்ணும்போது அவை கசப்பு சுவையைத் தரும். எனவே அதனை தவிர்த்துவிட வேண்டும்.

புதிதான பழங்களை பையில் போட்டு குளிர்பதனப் பெட்டியில் வைத்து இரண்டு நாட்கள் உபயோகிக்கலாம். உலர்ந்த அத்திப்பழங்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்து 6-8 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

 

அத்திப்பழத்தினை உண்ணம் முறை

அத்திப்பழமானது அப்படியே உண்ணப்படுகிறது. பழக்கலவையுடன் சேர்த்தும் உண்ணப்படுகிறது. சூப், கஞ்சி வகைகள், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சிகளுடன் சேர்த்து சமைத்து உண்ணப்படுகிறது.

காலைஉணவில் தானியங்களுடனும், கேக்குகள், புட்டிங்குகள், ரொட்டித்துண்டுகள் ஆகியவற்றுடனும் உண்ணப்படுகிறது.

 

அத்திப்பழத்தினைப் பற்றிய எச்சரிக்கை

அத்திப்பழத்தினை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது அவை வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவற்றை உண்டாக்குகிறது.

அத்திக்காயினை உண்ணும்போது அவற்றில் உள்ள பால் போன்ற திரவம் வாய் மற்றும் தொண்டைப்பகுதிகளில் புண்களையும், எரிச்சலையும் உண்டாக்குகின்றது.

அத்தி இலைகள் மற்றும் காய்களிலிருந்து வெளிவரும் லேக்டெக்ஸ் தோலில் படும்போது அவை அப்பகுதியில் எரிச்சலை உண்டாக்குகின்றன.

நன்மைகள் அதிகம் உள்ள அத்திப்பழத்தினை அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here