சிறப்பான பயிற்சி அளித்து அரசுப்பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யவேண்டும். தேர்வு குறித்த தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.

புதுக்கோட்டை,பிப்,21- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள்,அனைத்து வகை உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள்,மெட்ரிக்பள்ளிகள் ஆகியவற்றின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு மார்ச்2019 மேல்நிலை(பதினொன்று மற்றும் பன்னிரெண்டு),இடைநிலைப்பொதுத்தேர்வு(பத்தாம் வகுப்பு) சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை bமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமைதாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:இந்த ஆண்டு மார்ச்2019 இல் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு,பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வினை நமது மாவட்டத்தில் சிறப்பான முறையில் நடத்தவேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர்கள்,முதன்மைக்கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையம்,தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு காவலர் நியமனம் கோரி உரிய காவல்நிலையத்திற்கு கடிதம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.தேர்வு நாட்களில் மின்சாரம்,தீ தடுப்பு ஆகிய அலுவலகங்களுக்கு முன்கூட்டியே கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கவேண்டும். போக்குவரத்து மேலாளருக்கு தகவல் தெரிவித்து தேர்வு நாளன்று மாணவர்கள் வந்து செல்ல பேருந்துகள் தடையின்றி இயக்க ஏற்பாடு செய்யவேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர்கள் அனைத்து தேர்வு மையங்களும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும் நல்ல நிலையில் உள்ளதை உறுதிப்படுத்தவேண்டும்.தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து முதுகலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் தேர்வு குறித்து வட்டார அளவில் பயிற்சி வழங்கவேண்டும்.முதன்மைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்திற்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள பள்ளி எண்கள்,தேர்வு மைய எண்கள் ஆகியவை சரியாக உள்ளனவா என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.இந்த ஆண்டு மார்ச் 2019 இல் நடைபெறும் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களான தமிழ்,ஆங்கிலம் ஆகியவற்றிற்கு மாலை 2.00 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேர்வு நடைபெறுவதை மாணவர்களுக்கு நன்கு தெரிவித்து பயிற்சிஅளிக்கவேண்டும். தேர்வு மைய தலைமையாசிரியர்கள் தேர்விற்கு வேண்டிய அனைத்து விதமான படிவங்களையும் பதிவிறக்கம் செய்து தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும். முதன்மைக்கண்காணிப்பாளர்கள் அறைக்கண்காணிப்பாளர்களை தேர்வுக்கு முதல்நாள் மையத்திற்கு வரவழைத்து தகுந்த அறிவுரைகள் வழங்கவேண்டும்.பதினொன்றாம் வகுப்பு செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.கற்றல்,கேட்டல் மதிப்பெண்களை பாடவாரியாக பள்ளித்தலைமையாசிரியர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்வேண்டும்.நாளை முதல் 22-02-2019( வெள்ளிக்கிழமை) வருகிற 28-02-2019 க்குள் பத்தாம் வகுப்பிற்கு அறிவியல் செய்முறைத்தேர்வினை சிறப்பான முறையில் நடத்தவேண்டும். சிறப்பான பயிற்சி அளித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பள்ளித்தலைமையாசிரியரும் ஒவ்வொரு நாளும் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் விபரங்களை குறுந்தகவல் அனுப்பவும், மாணவர்களின் வருகைப்பதிவினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதிசெய்யவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களின் வருகையினை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வதை உறுதிசெய்யவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் கே.அண்ணாமலைரஞ்சன்,இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,தேர்வுத்துறை உதவி இயக்குநர் பிச்சைமுத்து, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், பள்ளித்துணை ஆய்வாளர்கள்,சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்,முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here