எட்டாம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லை (No Detention Policy) என்ற அரசின் கொள்கையை கைவிட வேண்டாம் என்று பொதுப்பள்ளிக்கான் மாநில மேடை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வெளியிட்டுள்ள அறிக்கை:
“எட்டாம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லை (No Detention Policy) என்பது தமிழ் நாடு அரசின் கொள்கை முடிவாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுமத்தின் (Central Advisory Board on Education – CABE) 65-வது கூட்டம் புது டெல்லியில் 2016, அக்டோபர் 25 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைநிற்றல் இல்லாத் தேர்வை இரத்து செய்யும் ஆலோசனையை மத்திய அரசு முன்வைத்தது.
கூட்டத்தில்  பங்கேற்ற தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை  & உயர் கல்வித் துறை அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்ததோடு தமிழ் நாடு அரசு இடைநிற்றல் இல்லாத் தேர்வைத் தொடர விரும்புகிறது என தெரிவித்தனர்.
இத்தகைய ஆட்சேபணைகளை வேறு சில மாநிலங்களும் தெரிவித்த நிலையில், இடைநிற்றல் இல்லாத் தேர்வைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற முடிவை எடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கப்படும் என அக்கூட்டம் முடிவு செய்தது.
கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை  அமைச்சர் தெரிவித்தார். தமிழ் நாடு அரசின் அன்றையப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. திருத்தத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் நாடு அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்குத் தேர்வு நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகின்றன.
தேர்வு நடத்த ஆயத்தப்பணிகள் நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 8-ம் வகுப்புவரை இடை நிற்றல் இல்லாத் தேர்ச்சி என்ற கொள்கையை மாற்றி 5 மற்றும் 8 வகுப்புகளுக்குத் தேர்வு நடத்தும் முன்மொழிவுகள் தமிழ் நாடு அரசிடம் இருக்குமெனில் அத்தகைய முன்மொழிவுகளை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் எனக் கோருகிறோம்.
கற்றல் குறைபாட்டிற்கு மாணவரே பொறுப்பேற்க வேண்டும் என்பது நியாயமற்றது. கற்றல் கற்பித்தல் பணியல்லாத பிற பணிகள் செய்வதற்கு ஆசிரியர்களைப் பணித்தல், அன்றாட பள்ளி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் அல்லாத வேறு பணியிடங்களே இல்லாத நிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அரசு நடத்திவருதல், மாணவர் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், மாணவர்களின் வாழ்விடச் சூழலைக் கருத்தில் கொண்டு அதற்கு உகந்த கற்றல் சூழல், கற்றல் செயல்பாடு ஆகியவற்றை அமைத்துத்தர முன்வராமல் கற்றல் குறைப்பாட்டிற்கு மாணவரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது சமத்துவக் கோட்பாடு, வாழ்வுரிமை உள்ளிட்ட மனித உரிமைளை மறுக்கும் செயலாகும்.
சமமானக் கற்றல் சூழல் அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டமும், உயர்நீதி மன்றங்களும், உச்சநீதி மன்றமும் வலியுறுத்தியுள்ளன.
இந்திய அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை ஒவ்வொரு குடிமகளும் / குடிமகனும் சமமாக அனுபவித்திட வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டிய ஒரு நல்வாழ்வு அரசு சமமற்ற கற்றல் சூழலில் வளரும் குழந்தைகளைச் சமமான தேர்வு மூலம் மதிப்பீடு செய்வது அரசியல் சட்டத்தின் நோக்கத்திறகே எதிரானது.
தேர்வு என்றால் என்ன என்பதை புரிந்துக் கொள்ள இயலாத குழந்தைப் பருவத்தில் தேர்வு, அதில் தேர்ச்சியில்லை என்றால் உடனடித் தேர்வு, அதிலும் தேர்ச்சியில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் அக்குழந்தை பயில வேண்டும் என்பது குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையாகவே கருத வேண்டியுள்ளது.
கல்வியில் குறிப்பாகப் பள்ளிக் கல்வியில் உலக முழுவதும் நடந்து வரும் மாற்றங்களை, முன்னேற்றங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த மதிப்பீட்டு முறைக்கே மாறுகிறோம் என்பது தமிழ் நாட்டைப் பின்னுக்கிழுக்கும் செயலாகும்.
விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளை இத்தகைய முடிவுகள் பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கும். பள்ளியை விட்டு விடுபடுதல் அதிகரிக்கும். 
8 ஆம் வகுப்பு வரை இடைநிற்றலில்லாத் தேர்ச்சி என்ற தமிழ் நாடு அரசின் கொள்கையை மாற்றும் முயற்சிகளை கைவிட்டு, தொடக்கக்கல்வியை வலுப்படுத்தி, பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற உரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.”
இவ்வாறு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here