15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமலாக்கிட வேண்டும், மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு அதன் சொத்துகளை மாற்றி கொடுக்க வேண்டும், பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை பராமரிக்க முன்மொழியப்பட்டுள்ள ‘அவுட் சோர்ஸிங்’ முறையை கைவிட வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3 நாட்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

அலுவலகங்கள் முன்பும் நேற்று அதிகாரிகள்-ஊழியர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக வளாக நுழைவுவாயில்களை மூடி, அதன் முன்பு கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் பங்கேற்றார். சென்னை கெல்லீசில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஜி.பழனியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல நகரின் எல்லா பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.செல்லப்பா, எம்.கன்னியப்பன் ஆகியோர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டிலேயே தனியார் நிறுவனங்களுக்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் அனுமதியை மத்திய அரசு வழங்கி விட்டது. ஆனால், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் அனுமதியை மத்திய அரசு அளிக்க மறுக்கிறது. அதேவேளை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு போதுமான நிதி உதவியை ஒதுக்கவில்லை.

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பி.எஸ்.என்.எல். நிலங்களை அரசு தான் வைத்திருக்கிறது. அந்த நிலங்களை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் பெயரில் மாற்றி தருவதாக உறுதி அளித்ததையும் அரசு நிறைவேற்றவில்லை. இந்த காலி நிலத்தை வாடகைக்கு விடும் பட்சத்தில் மாதம் பல கோடிகள் வருவாய் கிடைக்கும். எல்லாவற்றையும் மீறி ஜியோ நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தாரவார்க்கும் முயற்சியும் சத்தமில்லாமல் நடக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 1.75 லட்சம் பி.எஸ்.என்.எல். நிறுவன பணியாளர்களும் இன்று (நேற்று) முதல் வருகிற 20-ந்தேதி வரை (நாளை) 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கு பிறகும் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் அடுத்தடுத்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம்.

சூழ்நிலைகள் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் மட்டும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம் நடத்தவில்லை. தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு தற்போது அங்கு தொலைதொடர்பு சேவை முடங்கி இருப்பதாலும், செயற்கைக்கோள் உதவியுடன் அப்பணியை மீட்கும் பொறுப்பை பி.எஸ்.என்.எல். மட்டுமே செய்யமுடியும் என்பதாலும், அங்கு மட்டும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராடவில்லை. எனவே எங்கள் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கினாலும் ஒரு சில பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மட்டுமே நேற்று அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இதனால் அலுவலக பணிகள் நேற்று பெரிதும் பாதித்தன. வாடிக்கையாளர்கள் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. விண்ணப்பங்கள் அனைத்தும் காவலாளிகள் மூலமே பெறப்பட்டு, அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here