*என்ன செய்யப்போகிறாய்?*

வார்த்தைகள் வரவில்லை
வெட்கத்தால் , வேதனையால் வார்த்தைகள் வரவில்லை..

எல்லையில் நின்று
எங்களைக் காத்தீர்!
எல்லைக்குள்ளே உம்மை பலிகொடுத்தோமே!

நாட்டுக்குள்ளேயே நயவஞ்சகர்களிடம் உம்மை பலிகொடுத்தோமே!

வீரமரணம் என்று
வீராப்பாய் பேசி
இந்த நாளை கடக்கமுடியவில்லை..

கண்ணுறங்கிப் படுத்தால்
போடா! சுயநலவாதி என்று
கைகொட்டிச் சிரிக்கிறது
மனச்சாட்சி..

பனியிலும், வெயிலிலும்
மழையிலும், குளிரிலும்
எல்லையில் நின்றானே!
எல்லைச்சாமியாய்..
உன்னைக் காக்க..

ஆடுகளைப் போல அவர்களை
பலிகொடுத்துவிட்டு கல்லாய் நிற்கிறாயே!
இரக்கமில்லையா உன் இதயத்தில்..

உறக்கம் வருகிறதா? உன் உதிரத்தில் என
சாட்டை எடுத்து வீசுகிறது மனச்சாட்சி…

வெட்கித் தலை குனிகிறேன் வேதனையில்..
வெறுங்கையோடு நிற்பதால்..

கழுத்தறுத்து போட்டபோதும் கையாலாகாதவராய் கடந்து வந்தோம்..

குருவியெனச் சுட்டு வீழ்த்திய பொழுதும் குற்ற உணர்ச்சியின்றி
குனிந்து நின்றொம்.

நாட்டுக்குள்ளே புகுந்துவிட்டான்.
நாசமும் செய்துவிட்டான்.

ஆட்சியாளனே! உன்
அறிக்கை அரசியலும்
எனக்கு வேண்டாம்-
அடிமைத்தனமும் அறவே வேண்டாம்.

பிரிவினை வாதமும் வேண்டாம்- பிரித்தாளும்
சூழ்ச்சியும் வேண்டாம்.

தீவிரவாதம் தான் காரணமா?
தீவிரமாய்த் தாக்கு..
தீரும்வரை தாக்கு…

இப்பொழுதும் சொல்கிறேன்.
இதயத்தோடு சொல்கிறேன்..
கண்மூடித்தனமாக தாக்காதே!
அந்த தேசத்திலும் மக்கள் உண்டு.
எனது இலக்கு தீவிரவாதம் அழிய வேண்டுமென்பதே!

பாகிஸ்தானை பந்தாடு என்பதல்ல நோக்கம் – பயங்கரவாதிகளை மட்டும் பந்தாடு- அதுவும்
பயம்கொள்ளும் வகையில் பந்தாடு,
பயங்கரமாய் பந்தாடு என்பதே!

ஆண்மை என்பது பிறப்பில் இல்லை
ஆளுமையில் இருக்கிறது..
ஆண்மையுள்ள அரசை எதிர்பார்க்கும் 130 கோடி மக்களில் ஒருவனாய் மண்டியிடுகிறேன்.
நியாயம் வேண்டி மன்றாடுகிறேன்..

இருந்தால் இறைவனிடம்..
இல்லையெனில் இயற்கையிடம்..

சிகரம் சதிஷ்குமார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here