புல்வாமா
புழுதிச்சாரலில்
புழுங்கியது

காஷ்மீர் மட்டுமல்ல
இந்தியாவும்
கண்ணீர் கடலில். . .

பரிவட்டம் சூட்டி
பல்லாக்கில்
அனுப்பி வைத்தது
பாடையில்
திரும்பி வரவா ?

பொட்டு
வைத்துப் போனாயே
நெற்றி
நெருப்பில் நீராடவா

நாட்டுக்கு
மாராப்பாக சென்றாயே
என் மனசை
நிர்வாணமாக்கி. . .

மார்பகம் சுரக்குதடா
பாலூட்ட முடியலடா
மார்போடு
மனசும் கட்டிப்போனதடா
தூளியில்
குழந்தையும்
வாழ்க்கையும் தூங்கியதடா

வீரத்தின்
விளை
நிலத்தினை உழ
தைரியமில்லா
சோரம்போன
கோழைகள்

என் சக
சகோதரிகளின்
கழுத்தில்
தாலி இறங்கும் முன்
தீவிரவாதத்தின்
கழுத்தினை அறுத்தெறிந்திடு

பாரதம் காத்திட
பனியும்
பதுங்கு குழியும்
பஞ்சுமெத்தை என்றாயே

சவக்குழியும்
சக்களத்தியென
சொல்லாமல் போனாயே ( ராணுவ வீரர் மனைவியின் நனைந்த கண்ணீர்) பி.கே.இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here