வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் இணைப்பது கட்டாயம்; மார்ச் 31 வரை காலக் கெடு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோர் அத்துடன் தங்களது ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இவ்விதம் இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும் என்று மத்திய வருமானவரித் துறை ஆணையம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் உறுதி செய்துள்ளது. இதையடுத்து 1961-ம் ஆண்டைய வருமான வரிச் சட்டம் 139-ஏஏ பிரிவின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி சிபிடிடி ஒரு உத்தரவை பிறப்பித்தது. ஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது. இந்த பணிகள் மார்ச் 31-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சிபிடிடி தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் பான் அட்டையுடன் ஆதார் அட்டை எண் இணைக்கப்பட்டு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தது. 2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த இருவர் தாங்கள் ஆதார் மற்றும் பான் விவரத்தை அளிக்கவில்லை. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கானது நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்விடம் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றமே ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ததால் வருமான வரி சட்டம் 139-ஏஏ பிரிவின்கீழ் ஆதார், பான் ஆகியவை இணைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டப்படி ஆதார் செல்லுபடியாகும் என தெரிவித்திருந்தது. அதேசமயம் அதை வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண் மற்றும் பள்ளி சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு கட்டாயம் தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை என கூறியிருந்தது.

மொத்தம் பான் கார்டு வைத்திருப்போரில் 23 கோடி பேர் ஆதார் அட்டையுடன் இணைத்துள்ளதாக சிபிடிடி முன்னாள் தலைவர் சுஷீல் சந்திரா சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதுவரையில் மொத்தம் 42 கோடி பேருக்கு பான் கார்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாருடன் பான் இணைக்கப்பட்டால், பான் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் வாடிக்கையாளர்களின் வரவு, செலவு தெளிவாகத் தெரியும் என்று சந்திரா குறிப்பிட்டார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here