பொதுத் தேர்வு துவங்கியுள்ள நிலையில், சி.பி.எஸ்.இ., மாணவர்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. நாடு முழுவதும், 4,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில், 21 ஆயிரத்து, 400 பள்ளிகளைச் சேர்ந்த, 31 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். முதற்கட்டமாக நேற்று, தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வு துவங்கியது. முக்கிய பாடங்களுக்கான தேர்வு, மார்ச், 2ல் துவங்க உள்ளது. 10ம் வகுப்புக்கு, வரும், 21ல் தேர்வு துவங்குகிறது.கடந்த ஆண்டு போல, வினாத்தாள்கள், சமூக வலைதளங்களில், ‘லீக்’ ஆகாமல் தடுக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான வினாத்தாள், ஆன்லைனில் இடம் பெறாமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுள்ளது.இந்நிலையில், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் புதிய கட்டுப்பாட்டை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. அதன் விபரம்:சமூக வலைதளங்களில், பொதுத் தேர்வு தொடர்பான வினாத்தாள்கள் என்ற பெயரில் வெளியாகும், எந்த தகவலையும், மாணவர்களும், பெற்றோரும் நம்பக்கூடாது. பொதுத் தேர்வு குறித்து, அதிகாரப்பூர்வமாக வெளியாகும் தகவல்களை மட்டும் பின்பற்றுங்கள்.இந்த தேர்வு காலத்தில், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் இருந்து, விலகி இருப்பது நல்லது.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here