சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் அங்கீகாரம் பெற்ற 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 4 ஆயிரத்து 974 மையங்களிலும், அங்கீகாரம் பெற்று வெளிநாடுகளில் இயங்கும் 225 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 78 மையங்களிலும் தேர்வு எழுதுகிறார்கள்.

இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு கேள்வித்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எப்பொழுதும் போல் இல்லாமல், மாணவர்கள் சிந்தித்து விடை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் பள்ளியில் கொடுக்கப்படும் அடையாள அட்டைகளை கட்டாயம் அணிந்து தேர்வு அறைக்கு வரவேண்டும் என கூறப்பட்டது. ஹால் டிக்கெட் இன்றி வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பேனாக்கள் மற்றும் அடிப்படை உபகரணங்களை மட்டுமே தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பென்சில் பாக்ஸ் கொண்டு செல்லலாம் ஆனால் அதில் எதுவும் எழுதியிருக்கக்கூடாது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே, நொறுக்குத்தீனி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அனைவரும் தண்ணீர் பாட்டில்களை வெளிப்படையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

செல்போன், புளூடூத் ஸ்பீக்கர், ஹெட்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், ஹெல்த் பேண்டு உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்கள் எதையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பிரிண்டிங் செய்யப்பட்ட மற்றும் கைப்பட எழுதப்பட்ட எந்த பொருளுக்கும் அனுமதி இல்லை.

சிப்ஸ், குளிர்பானம், பிஸ்கட் உள்ளிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகளை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் தவறான மற்றும் பொய் செய்திகளை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம். அவ்வாறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி மார்ச் 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேர்வினை 4,974 மையங்களில் 18 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத இருக்கின்றனர் .

தேர்வு பணிக்காக 3 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை கடந்த ஆண்டை விட ஒருவாரம் முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளது .

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here