மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருவள்ளூரை அடுத்த போலிவாக்கத்தில் உள்ள தனியார் கல்விக் குழுமத்தின் 14-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரைப் பாராட்டி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பிளஸ் 2 முடித்தாலோ அல்லது அதேபோல் பட்டப்படிப்பு முடித்தாலும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்தில் திறன்வளர்ப்பு பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டு நிகழாண்டு முதல் திறன்வளர்ப்பு பயிற்சிக்கான 12 பாடப் பிரிவுகள் இடம் பெற உள்ளன.
தற்போதைய நிலையில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில்  1 லட்சம் மாணவ, மாணவியர் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர உள்ளனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதோடு குறையவில்லை. அதேபோல் நிகழாண்டிலும் ஒவ்வொரு பள்ளியையும் சேர்ந்த ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கிராமங்களுக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 2 லட்சம் மாணவர்கள் வரையில் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.1,000 கோடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வகையில் இத்துறைக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ.26,092 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரூ.27,605 கோடியும், நிகழாண்டில் ரூ.28,759 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் உயர் கல்வியில் 75.06 சசவீதம் பேர் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் 48.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமான தேர்ச்சி விகிதமாகும். இதற்கு காரணம் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளதே ஆகும். இதைக் கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகளில் பன்முக கற்றல் வகுப்பறைகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
அப்போது, ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், பொன்னேரி சட்டப் பேரவை உறுப்பினர் பலராமன், தமிழ்நாடு பாடநூல் கழக உறுப்பினர் பா.வளர்மதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here