பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஏற்கனவே, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு இல்லாமல் இருந்ததால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல் தவிர்த்தன. இந்த பிரச்னையை போக்கும் வகையில், 2017 – 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும், பொதுத் தேர்வுத் அறிமுகம் செய்யப்பட்டது.நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 6ல் துவங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பங்கேற்கின்றனர். இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை துவங்க உள்ளது.இதற்காக, மாநிலம் முழுவதும், கல்வி மாவட்ட வாரியாக, முக்கிய பள்ளிகளில், செய்முறை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிற பள்ளிகளைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்வை பெயரளவிற்கு நடத்தாமல், மாணவர்கள், ஆய்வகம் மற்றும் ஆய்வக பொருட்கள் குறித்த தகவல்களை அறியும் வகையில், முறைகேடின்றி நடத்த வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே செய்முறை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளன. நாளை முதல், வரும், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here