அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ‘ஆண்ட்ராய்டு செயலி’ வாயிலாக, வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும்’ என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கல்வி தரத்தை மேம்படுத்த, பல்வேறு தொழில்நுட்ப திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவில், தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையில், ‘பயோ மெட்ரிக்’ வருகை பதிவு திட்டம் வர உள்ளது.அதற்கு முன், வருகை பதிவுக்காக, ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, ‘சமக்ர சிக் ஷா’ இயக்ககம் வழியே, இந்த செயலி அமலுக்கு வந்துள்ளது. இதில், ஒவ்வொரு நாளும், மாணவர்களின் வருகை, பாட வேளை வாரியாக ஆசிரியர்களின் வருகை, விடுமுறை விபரம் போன்றவற்றை பதிவு செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டு, பல மாதங்களாகும் நிலையில், பல பள்ளிகளில் அவற்றை, தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தவில்லை. குறிப்பாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவுகளில், தில்லு முல்லு நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டும், பல தொடக்கப் பள்ளிகளில், இந்த செயலியை பயன்படுத்தவில்லை.இது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆய்வு நடத்தி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், கூறியிருப்பதாவது:தமிழக பள்ளிகள் என்ற பெயரில் உள்ள, ஆண்ட்ராய்டு செயலியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதில், முறைகேடு இல்லாமலும், பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படும் வகையிலும், தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுவர்.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், கண்காணிப்பு பணியை மேற்கொண்டு, செயலியின் பயன்பாட்டை, 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here