தமிழகத்தில் 45 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொதுத் தேர்வுப் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1,   பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  பொதுத் தேர்வுக்கான கண்காணிப்பு பணிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஈடுபட வேண்டும்.  இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 120 கல்வி மாவட்டங்களில் தற்போது 45 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  இதனால் பொதுத் தேர்வுக்கான பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:
தொடர்ச்சியான தேர்வுப் பணிகள்:  பொதுத் தேர்வுப் பணிகளைப் பொறுத்த வரையில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 1,  பிளஸ் 2 ஆகிய மூன்று வகுப்புகளிலும் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை உறுதிப் படுத்துதல்,  தேர்வு மையங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருதல்,  வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களில் ஆய்வு செய்தல்,  வினாத்தாள்கள் வந்தவுடன் போலீஸார் உதவியுடன் அவற்றைப் பாதுகாத்தல்,  தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணி ஆணையை வழங்குதல்,  விடைத்தாள்களை வழித்தட அலுவலர்களிடமிருந்து சேகரித்தல்,  தேர்வு மையங்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட முக்கியப் பணிகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பொதுத் தேர்வுகள் மட்டும் அல்லாமல், கீழ் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகளையும் நடத்த வேண்டிய பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உள்ளது.  ஒவ்வோர் ஆண்டும் இது போன்று காலிப் பணியிடங்கள் ஏற்படும்போது அந்தப் பணிகளை மேற்கொள்ள  பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.  அதே போன்று இந்த ஆண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலைமை ஆசிரியர்களே பொறுப்பு வகித்து வருகின்றனர். 
தலைமையாசிரியர்களுக்கு பணிச்சுமை:  பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்களைத் தயாரித்தல், தேர்வு மையப் பணிகளைக் கவனித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டிய தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணிகளையும் கூடுதலாக கவனித்து வருவதால் பள்ளிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.   
எனவே பொதுத் தேர்வுப் பணிகள்-பள்ளிப் பணிகள் தொய்வின்றி நடைபெற 45 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என கல்வியாளர்கள்,  அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விரைவில் நிரப்பப்படும்: இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ்,  மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான குழு ஒப்புதலும் அளிக்கப்பட்டு விட்டது. எனவே, விரைவில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here