தமிழக அரசின், 2019 – 20ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபையில், துணை முதல்வர், பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். லோக்சபா தேர்தல் வர உள்ளதால், இந்த பட்ஜெட்டில், மக்களை கவரும் வகையில், சலுகைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு சார்பில், பிப்ரவரி, 1ல், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மக்களை கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றன. மத்திய அரசு பட்ஜெட்டை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், இன்று, 2019 – 20ம் ஆண்டுக்கான பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதல்வர், பன்னீர்செல்வம், எட்டாவது முறையாக, பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

கடந்த பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 17 ஆயிரத்து, 490 கோடி ரூபாயாகவும், நிதி பற்றாக்குறை, 44 ஆயிரத்து, 480 கோடி ரூபாயாகவும் இருந்தது. தற்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு,
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால், இம்முறை, வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், லோக்சபா தேர்தல் வர உள்ளதால், மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகளை வெளியிட, அரசு முடிவு செய்துள்ளது. பருவ மழை பொய்த்துள்ளதால், குடிநீர் திட்டப் பணிகளுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்படும். விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழு கூடி, பட்ஜெட் மீதான விவாதத்தை, எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை, முடிவு செய்யும். தேர்தல் வர உள்ளதால், துறைகளுக்கு முன்னதாக நிதி வழங்க, சபையில் ஒப்புதல் பெறப்படும். துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், தேர்தல் முடிந்த பின் நடத்தப்படும் என, தெரிகிறது.

பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, குடிநீர் பிரச்னை, அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் வேலைநிறுத்தம், கோடநாடு விவகாரம் உட்பட, பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இலவச மொபைல், தீபாவளி போனஸ்: தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்: அ.தி.மு.க., வெளியிட்ட, 2016 சட்டசபை தேர்தல் அறிக்கையில், ‘பெண்களுக்கு, 50 சதவீதம் மானிய விலையில், ஸ்கூட்டர் வழங்கப்படும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், இலவச மொபைல் போன் வழங்கப்படும்’ என, வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஸ்கூட்டர் வழங்கப்பட்டது; இலவச மொபைல் போன் வழங்கப்படவில்லை. இதை அமல்படுத்தும் அறிவிப்பு, பட்ஜெட்டில் வர வாய்ப்புள்ளது. சென்னை பஸ்களில், முதியோர் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை, விரிவுப்படுத்தும் அறிவிப்பு இன்று வெளியாகலாம். தீபாவளி பண்டிகையை ஒட்டி, தினக்கூலி தொழிலாளர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பும் வெளியாகலாம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திருப்திப்படுத்தும் வகையில், 10 மாத நிலுவைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்புகளும் இடம் பெறலாம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here