*ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் 2019! என் முகத்தில் அடித்துச் சொல்லியது என்ன?*

_✍🏽செல்வ.ரஞ்சித்குமார்_

உரிமை மீட்கும் களத்திற்குச் செல்வதைத் தவிர்க்க ஆயிரம் காரணங்கள் அடுத்தடுத்து உதயமாகும்.

ஆனால்,

உரிமை மீட்கும் களத்திற்குச் செல்ல ஒற்றைக் காரணம் மட்டுமே உந்தித் தள்ளும்.

ஆம்.

அது, *”சமூகப் பொறுப்புணர்ந்த உரிமை வேட்கை”.*

அது. . . *”அடுத்தடுத்த தலைமுறைக்கு வாழ்வியல் கூறுகளைக் கற்பிக்கும் ஒரு ஆசிரியனான என்னிடத்தில் உள்ளதா?”*

இக்கேள்விக்கான பதிலை முகத்தில் அடித்தார் போல் சொல்லிச் சென்றுள்ளது, ஜாக்டோ-ஜியோவின் 2019 வேலைநிறுத்தம்.

ஆம்.

2017-ல் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில், இயக்கத் தலைமைகளின் துரோகங்கள், அதிகாரக் கெடுபிடிகள், வழக்காடுமன்றத் தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி அனுதினமும் களத்திற்கு வந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல, தடைவிதித்தோராலேயே ஊதியக்குழுவிற்கான விடை கிடைத்தது.

ஆனால். . . 2019-ல்,

என்னிடம் படித்துச் சென்றவருக்கு வேலையில்லை – இனிமேல் படிப்பவருக்குப் பள்ளியில்லை – படித்துப் பணியிலுள்ளோருக்குக் காலமுறை ஊதியமில்லை – காலமுறை ஊதியம் பெற்றவருக்கு – ஒரு பைசாகூட ஓய்வூதியமில்லை என்ற நிலையில்,

கதிர் பருவக் கல்வி முதல் உதிர் பருவ ஓய்வூதியம் வரையான உரிமைகளை மீட்டுக் கொணரும் தலைமுறை காக்கும் களப் போராட்டத்திற்கு வந்த எனக்கு,

வழக்கமான அதிகாரக் கெடுபிடிகள் தவிர்த்து வழக்காடு மன்றம் கூட தடைபோடவில்லை என்ற போதிலும். . .

எட்டாம் நாளோடே எனது சமூகப் பொறுப்பற்ற ஈன எண்ணத்திற்கு முட்டுக் கொடுக்கும் காரணம் கூறி பணிக்குத் திரும்பியவரா நான்?

இல்லை. . .,

உடன் களத்தில் நின்றோர் சிறைப்பட்ட நிலையில், அவர்தம் இன்னல் தீருமுன்னே பணிக்குச் சென்றோரைக் காரணம் காட்டி களத்தில் இருந்து வெளியேறியவரா நான்?

இல்லை. . .,

உரிமை மீட்கும் களத்திற்கு வந்தவருக்கு ஊதியமில்லை என்பதை உணர்ந்திருந்தும், ஒற்றை ஊதியத்துடன் சக ஆசிரியன் களத்தில் நிற்க, இரட்டை ஊதியம் பெற்றும் பணமும் பணியும் முக்கியமென தன் இணையைப் பணிக்குத் திருப்பியவரா நான்?

இல்லை. . .,

எவர் எக்காரணம் கூறி தமது சமூகப் பொறுப்பற்ற ஈனச் செயலுக்கு முட்டுக் கொடுத்தாலும், பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்கப்படுவதற்கான உறுதி கிட்டாது, மீட்கத் துணிந்த முன்னத்தி ஏர்களெல்லாம் சிறைப்பட்டிருக்க, இறுதி வரை உறுதியுடன் களத்தில் நின்ற உரிமை மீட்புப் போராளிகளுள் ஒருவரா நான்?

*இவர்களில் நான் யார்?*

*எனது சமூகப் பொறுப்புணர்வு என்ன?*

*எனது நேற்றைய-இன்றைய-நாளைய மாணவர்கள் மீதான அக்கறை எத்தகையது?*

*என் இன்னல் களைய உடன் வருவோருக்கு நான் அளிக்கும் நம்பிக்கை எத்தகையது?*

*எனக்கான உரிமையோ / என் சக மானுடத்தின் உரிமையோ பறிபோகையில் எனது எதிர்வினை எப்படிப்பட்டது?*

*ஒரு ஆசிரியனாக வாழ்வியல் கூறுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கற்பிக்கும் நான் எப்படிப்பட்ட நபர்?*

என்பனவற்றை எல்லாம் எனது முகத்தில் அடித்தார் போல் சொல்லிச் சென்றுள்ளது, ஜாக்டோ-ஜியோவின் 2019 வேலைநிறுத்தம்!

அட முகத்தில் பட்டது வெறும் சொல்லடி தானே!

சொல்லிவிட்டுப் போகட்டுமென தப்படி போடுவோருக்கும்,

சொல்லடியை வெல்லும்படி விருதுகளை வாங்கிவிட எத்தனிப்போருக்கும்,

*ஜாக்டோ ஜியோவின்*

*2019 வேலைநிறுத்தம்*

*இடித்து உரைப்பது யாதேனில்,*

*கற்பிக்கும் உன்னைக்*

*காறி உமிழக்*

*காத்துக் கிடக்கிறது – நும்*

*களவியல் பிறப்பும்!*

*கல்வியியல் பிறப்பும்!*

*ஏனெனில், இது நம்*

*தலைமுறை காக்கும்*

*களப் போராட்டம்!*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here