டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்  தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் பாடநூல்கள் அரசு கிளை நூலகங்களில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4, குரூப் 2 தேர்வுகள்,  நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் மாநிலப் பாடத் திட்டத்தில் இருந்தே 60 முதல் 70 சதவீத வினாக்கள் இடம்பெறுகின்றன.  இதனால்  ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை தேர்வர்கள் தீவிரமாகப் படித்து வருகின்றனர்.  இந்தப் பாடநூல்களை சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் நேரடியாகவும்,  இணையதளத்தின் மூலமாகவும் ஆர்டர் செய்தும் பெறுகின்றனர். பழைய மாணவர்களிடமும் அவற்றைக் கேட்டு வாங்கிப் படிக்கின்றனர்.
பாடநூல்களிலிருந்து அதிக வினாக்கள்:  இந்நிலையில்  டிஎன்பிஎஸ்சி  போன்ற தேர்வுகளுக்குப் பெரிதும் பயன்படும் தமிழக அரசின் பாடநூல்கள் ஆன்லைனில் முழுமையாகக் கிடைப்பதில்லை. பழைய பாடநூல்களை வாங்குவதிலும் போட்டி நிலவுகிறது.  கடைகளில் அவை கிடைப்பதில்லை.  கடந்த ஆண்டு விஏஓ தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் பாடப் புத்தகங்களை தேடி  அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தேர்வுக்காகப் பாடநூல்களைப் பெரும்பாலும் நகலெடுத்துத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.  எனவே தேர்வர்களின் நலன் கருதி அரசின் சார்பில் செயல்படும் மாவட்ட மைய நூலகங்கள்,  முழு நேர கிளை நூலகங்களில் தமிழக அரசின் பாடநூல்கள் இடம்பெற வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்கள்,  நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் கூறியது:
டிஎன்பிஎஸ்சி உள்பட அனைத்துத் தேர்வுகளுக்கான  நூல்களும் அரசு நூலகங்களில் இடம்பெற்றுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  அதில் பாடநூல்களும் அடங்கும்.  ஆனால் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட மைய நூலகங்களில்  ஒரு சில நூலகங்களில் மட்டுமே பாடநூல்கள் இடம்பெற்றுள்ளன.  நூலகம் திறந்ததும் நுழைந்தால் கூட அவற்றைப்  பெற்றுப் படிப்பதற்கு பெரும் போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளது.  ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும் பல பாடநூல்கள் இருப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.
வீடுகளுக்கு அருகிலேயே படிக்க… இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள 314 முழு நேர கிளை நூலகங்கள், 1,612 கிளை நூலகங்களிலும் தமிழக அரசின் பாடநூல்கள் இடம்பெற வேண்டும்.  ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் கணக்கிட்டால் கூட ஆங்கிலம்,  தமிழ் எழு இரு மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 90 புத்தகங்கள் மட்டுமே வைக்க வேண்டியிருக்கும்.  இவற்றை வைப்பதற்கு ஒரு அலமாரியில் இரண்டு அடுக்குகளே தேவைப்படும்.
எனவே தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் ஒரு நூலகத்துக்கு ஒரு படி வீதம் பெற்று நூலகங்களுக்கு அனுப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் தேர்வர்கள் பாடநூல்களைத் தேடி அலைவது தவிர்க்கப்பட்டு வீடுகளுக்கு அருகிலேயே அவற்றைப் படிக்க முடியும் என்றனர்.
இது குறித்து பொது நூலகத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  அனைத்து நூலகங்களிலும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.  அதில் பாடநூல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here