கல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி!

கல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி!
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அறிவொளி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் அதிரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ரெய்டு நடத்தியது கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று, ஜாக்டோ ஜியோ போராட்டம் அனல்பறந்த நேரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளியின் அலுவலகம், வீட்டைக் குறிவைத்து அதிரடி ரெய்டு நடத்தினர். பொதுவாக அரசு தலைமை அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ரெய்டு நடத்துவதற்கு முன்பாக, அந்தத் துறையின் செயலாளர் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்று முதல்வர் பார்வைக்குச் சென்ற பிறகே, தலைமைச் செயலாளருக்குப் பரிந்துரை செய்வது வழக்கம். அதன் பிறகுதான் தலைமைச் செயலாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநருக்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புதல் அளிப்பார்.
வழக்கமாக இந்த நடைமுறைகள் நடக்க 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும் என்கிறது காவல் துறை வட்டாரம். அப்புறம் எப்படி அறிவொளி மட்டும் உடனடியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாரின் ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டார் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம்.
“கல்வித் துறை இயக்குநர் அறிவொளி 2010ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் பொது நூலக இயக்குநராக இருந்தார். அப்போது நடந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் முக்கியப் பங்கு வகித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு திமுக பிரமுகர்கள் சிலருடன் நெருக்கமாக இருப்பார். திமுக தலைமைக்கே நெருக்கமானவர் என்று கூட பேச்சு இருந்தது.
இதையெல்லாம் தெரிந்துவைத்திருந்த உளவுத் துறை அதிகாரி ஒருவர் இயக்குநர் அறிவொளியின் செல்போன் அழைப்பு விவரங்களைச் சேகரித்துள்ளார். ‘இவர்தான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல்
கொடுத்துள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டக்காரர்களுடனும் தொடர்பில்
இருந்துள்ளார்’ என்று கூறி, கடந்த திமுக ஆட்சியில் அக்கட்சியினருடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்களைச் சமர்ப்பித்துள்ளார். ஜனவரி 28ஆம் தேதியன்று மாலை முதல்வரைச் சந்தித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை அழைத்து பர்சனலாக இதைக் கூறியுள்ளார்.
ஜனவரி 29ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறைக்குப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்வித் துறை இயக்குநர் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் ஒரே நேரத்தில் ஒப்புதல் பெற்று, எப்போதோ வந்த பெட்டிஷன் அடிப்படையில் அறிவொளி மீது நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார் கிரிஜா.
இதையடுத்து, அன்று மாலை 6 மணிக்கே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் அறிவொளி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இந்த விஷயம் வெளியே கசியாமல் ரகசியமாக வைத்திருந்தனர். மறுநாள் (ஜனவரி 30) அறிவொளியின் வீட்டிலும், டிபிஐ வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் ரெய்டு நடத்தினர். இதில் அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை” என்கின்றனர் கல்வித் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள்.
அறிவொளி எப்போதும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பமாட்டார் என்கின்றனர் அவருடன் பணியாற்றியவர்கள். “எந்தச் சூழ்நிலையிலும் ஆட்சிக்கு எதிரான ரகசியத்தை வெளியிட மாட்டார். அப்படிப்பட்ட நல்ல அதிகாரியைப் பழி வாங்கியுள்ளது அதிகாரத்தில் உள்ள மூவர் டீம். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல, அந்த உளவுத் துறை அதிகாரிக்கு யாரைப் பார்த்தாலும் திமுக ஆதரவாளர், தினகரன் ஆதரவாளர் போலத் தெரிகிறது. அதனால்தான் இப்படியொரு பழிவாங்கும் நடவடிக்கை” என்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here