புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது, அரசுத் துறைகளில் பின்பற்றப்பட்டு வரும் மதிப்பூதியம், தொகுப்பூதிய முறைகளை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசுப் பள்ளிகள் இயங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் அரசு ஊழியர்கள்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், தொடர்ந்து போராடிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், “நாங்கள் அரசியல் செய்தால் தமிழகத்தில் யாரும் ஆட்சி செய்ய முடியாது” என எச்சரித்தனர். பல இடங்களில் போராட்டத்தை ஒடுக்க மறைமுகமாக அரசு களமிறங்கியது. அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தரப்படும் சம்பளம் எவ்வளவு என்கிற விவரத்தை அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் பேனராக வைத்தார்கள் ஆட்சியாளர்கள். இதற்காக ஆயிரக்கணக்கில் அரசு பணம் செலவழிக்கப்பட்டது. போராட்டம் உச்சத்தில் இருந்த ஜனவரி 27-ம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு விளம்பரம் வெளியிட்டது அரசு. `அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், உடனடியாக பணிக்குத் திரும்பவும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் அவர்களின் வேண்டுகோள்’ என்ற தலைப்பிட்டு நீண்ட விளக்கத்தை அந்த விளம்பரத்தில் அளித்தார்கள்.

பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்’ எனச் சொல்லி அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அலுவலக உதவியாளருக்கு 28,560 ரூபாய் சம்பளமும் ஓட்டுநருக்கு 35,400 ரூபாய் சம்பளமும் கண்காணிப்பாளருக்கு 66,840 ரூபாய் சம்பளமும் தரப்படுவதாகச் சொன்னது அரசு. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு 36,360 ரூபாயும் இணைச் செயலாளருக்கு 2,23,920 சம்பளமும் தரப்படுகிறது எனச் சொன்னது அந்த விளம்பரம். முதுநிலை ஆசிரியருக்கு 66,840 ரூபாயும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு 1,03,320 ரூபாயும் சம்பளம் அளிக்கப்படுகிறது எனக் கொஞ்சம் விரிவாகவே அந்த விளம்பரத்தில் சொல்லியிருந்தார்கள். இந்த விளம்பரம் வெளியிட்டதின் நோக்கம் தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்கு போராட்டம் என்பதுதான்.

இந்த விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிடுவதற்காக 50 லட்சம் ரூபாயைச் செலவழித்திருக்கிறார்கள். இப்படித்தான் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது இதேபோல விளம்பரம் வெளியிட்டது அரசு. அந்த விளம்பரத்துக்குச் செலவழித்த தொகை எவ்வளவு என்கிற விவரம் விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தது. அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களை தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்காக 46,54,361 ரூபாய் தரப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் அடிப்படையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு அரசு அளித்த விளம்பரம் 50 லட்சத்தை தாண்டும். இதுதவிர மாவட்டங்களில் பேனர்கள் வைக்கப்பட்டதற்கும் அரசு பணம் செலவழித்திருக்கிறார்கள். போராட்டம் தொடர்பாக காவல் துறையினருக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போராட்டத்தை ஒடுக்குவது தொடர்பாக அனைத்துச் செலவுகளையும் சேர்த்தால் 1 கோடி ரூபாய் வரையில் செலவாகியிருக்கும் என அரசு வட்டாரம் தெரிவித்தது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here