தமிழகம் முழுவதும், பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்கள் வழங்குவதற்கான நிர்வாக அனுமதியை ஒரு மாதத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

பணிபுரியும் பெண்களுக்காக மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 2018-19-ம் ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் மானிய விலை ஸ்கூட்டர்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

 மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்துக்கு மானியத் தொகையாக, அதிகபட்சம் ரூ.31 ஆயிரத்து 250 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இவற்றில் எது குறைவோ, அத்தொகை வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் கடந்த மாதம்தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் கடந்த ஆண்டு விண்ணப்பித்து தேக்கம் அடைந்துள்ள தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்யும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 19 ஆயிரத்து 319 மானிய விலை இரு சக்கர வாகனங்கள் பணிபுரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்குள் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வழங்குவதற்கான நிர்வாக அனுமதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர்வழங்குவதற்கான நிர்வாக அனுமதியை ஒரு மாதத்துக்குள் வழங்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த ஆண்டு விண்ணப்பித்து மானிய விலை ஸ்கூட்டர்கிடைக்காதவர்களின் விண்ணப்பங்களையும் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருவதால் கடந்த ஆண்டு கிடைக்காதவர்களுக்கு இந்த ஆண்டு ஸ்கூட்டர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் 19 ஆயிரத்து 319 பெண்களுக்கு கடந்த 15 நாட்களில் மானிய விலை ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு விண்ணப்பித்த1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு கடந்த ஆண்டு வழங்க முடியவில்லை. அவற்றில் தகுதியானவிண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த விண்ணப்பங்களுக்கு இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்புள்ளது.தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு ஒரு மாதத்துக்குள் நிர்வாகஅனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பணிபுரியும் பெண்களுக்கு இந்த ஆண்டு விரைவாக மானிய விலை ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here