உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெயரை பெற்றுள்ள நமது நாட்டில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என முதலில் தகவல்கள் வெளியாகின.
பின்னர் முழு பட்ஜெட் அல்ல, இடைக்கால பட்ஜெட் என மத்திய அரசு வட்டாரங்கள் உறுதி செய்தன.
இன்று தாக்கல்
நாடாளுமன்ற மக்களவையில் இந்த இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசுகிறார்.
நிதி மந்திரி பதவி வகித்த அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். இதன் காரணமாக நிதித்துறை பொறுப்பு, ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரியான பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
மரபு
இடைக்கால பட்ஜெட்டை பொறுத்தமட்டில் அரசு பெருமளவில் கொள்கை முடிவுகளையோ, அதிரடி சலுகைகளையோ அறிவிப்பதில்லை என்பது மரபு.
அந்த வகையில், 2019-20-ம் நிதி ஆண்டின் முதல் 4 மாத காலத்துக்கு, அதாவது புதிய அரசு பதவி ஏற்று, முழு பட்ஜெட் தாக்கல் செய்து நடைமுறைக்கு வரும் வரையிலான காலத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம், நடைமுறையில் இருந்து வருகிற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் போன்றவற்றுக்கு ஒப்புதல் பெறப்படும்.
விவசாயிகளுக்கு சலுகைகள்
ஆனால் சமீபத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியை தழுவுவதற்கு விவசாயிகளே பிரதான காரணம் என சொல்லப்படுகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக விவசாயிகளை கவர்கிற விதத்தில் அவர்களுக்கு சலுகைகளை இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
குறிப்பாக விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, 1 ரூபாயில் பயிர்க்காப்பீடு, விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை ஈடுகட்டுகிற வகையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் இழப்பீடு உள்ளிட்டவை அடங்கிய ரூ.70 ஆயிரம் கோடி சலுகை திட்டம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு
மேலும் சமீப ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படவே இல்லை. வருமான வரி செலுத்துகிற சம்பளதாரர்களை ஈர்க்கிற விதத்தில் தற்போதைய வருமான வரிவிலக்கு உச்ச வரம்பான ரூ.2½ லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
எனவே இது தொடர்பாக நிதி மந்திரி பியூஷ் கோயல் அறிவிப்பு வெளிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ரேஷன் பொருட்கள் மானியம்
சமையல் கியாஸ் மானியம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று ரேஷன் பொருட்களுக்கான மானியத்தையும் வங்கிக்கணக்கில் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடலாம். அப்படி ரேஷன் மானியம், வங்கிக்கணக்கில் செலுத்தப்படுமானால் ரேஷன் கடைகள் முடிவுக்கு வந்து விடும்.
சிறு வணிகர்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்படக்கூடும்.
இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பது இன்று தெரிய வந்துவிடும்.
இதற்கிடையே பட்ஜெட் கூட்ட தொடரையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள் சர்ச்சைக்கு இடம் அளிக்காத மசோதாக்களை மட்டுமே பட்ஜெட் கூட்ட தொடரில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here