உயர் கல்விக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி போதிய அளவுக்கு இல்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை தொடர்பாக ‘இந்தியா ஸ்பென்ட்’ வெளிக்கொண்டுவந்துள்ள புள்ளி விவர தகவல்களை நீங்களே பாருங்கள்:
இதுவரை, மொத்த பட்ஜெட்டில் மிக குறைந்த சதவீதமாக மட்டுமே உயர் கல்விக்கான செலவீனம் உள்ளது.
12 ஆண்டுகளில் சராசரியாக 1.47% இந்த நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா (241 மில்லியன் அல்லது 18% இந்தியர்கள்). ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை 2017 அறிக்கையின்படி, இது சீனாவை விட 169.4 மில்லியன் அதிகம் ஆகும்.

இந்தியாவின் இளைஞர்கள் எண்ணிக்கை
2020 க்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 34.33%, 15 முதல் 24 வயது வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி ஆளும் பாஜக அரசால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதை கருத்தில் கொண்டு இருக்க வேண்டியது அவசியம். வளர்ந்து வரும் இளைஞர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அஅவர்கள் உலகளாவிய ரீதியில் போட்டியிடுவதற்கான உயர்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வது, அரசின் பணிகளில் முக்கியமானது.

மாநில பல்கலைக்கழகங்களுக்கு பட்ஜெட் நிதி குறைவு
2018-19 ஆம் நிதியாண்டில் ஆண்டில் உயர் கல்விக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு இது ஒரு சிறிய தொகையாகும். பல்கலைக் கழகங்களுக்கு நிதியளித்தல் என்பது தேவைக்கு ஏற்ற அளவுக்கு இல்லை. பொதுப் பல்கலைக்கழகங்களில், 97% மாணவர்கள் மாநில பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும்போது, மத்திய பல்கலைக்கழகங்களில் மீதமுள்ள 3% மட்டுமே பயில்கிறார்கள். ஆனால் 57.5% பட்ஜெட் நிதி என்பது மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு செல்கிறது. மாநில பல்கலைக் கழகங்களுக்கு அதிக நிதி, வளங்கள் தேவைப்படுகிறது.

இந்தியாவில் உயர் கல்வி பயில்வோர் குறைவு
உயர் கல்வியில் இந்தியாவின் சேர்க்கை விகிதம் குறைவாகவே உள்ளது. 2017-18 ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 8 முதல் 23 வயதுள்ள இளைஞர்களில் 70 சதவீதம் பேர் உயர் கல்வியில் பதிவு செய்யவில்லை என்பது தெரியவருகிறது. யுனெஸ்கோ ஆய்வுப்படி, 2000 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் சீனா ஆகியவை தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட அதே சதவிகிதம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செலவழித்தன: இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.77% மற்றும் சீனா 0.89% செலவழித்தது. இருப்பினும், சீனா அதன் செலவினங்களை சீராக அதிகரித்து 2016 ல் 2.11% ஆக அதிகரித்துள்ளது. இந்தியா 0.73% -0.87% என்ற அளவில் பின்தங்கியுள்ளது. இது 2015இல் 0.62% ஆக சரிந்தது.

தரம் குறைந்த இந்திய பல்கலைக்கழகங்கள்
உலக பல்கலைக்கழக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து குறைந்த இடங்களை பிடித்து வருகின்றன. டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2019இன் படி, ஒரே ஒரு இந்திய பல்கலைக் கழகம் தரவரிசைப்படுத்தப்படவில்லை. மேலும் 5 கல்வி நிறுவனங்கள் மட்டுமே டாப் 500 க்குள் உயர்ந்தன. இந்த தரவரிசை என்பது, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கற்பித்தல் தரம், ஆராய்ச்சி எண்ணிக்கை மற்றும் ஆராய்ச்சி தரம் ஆகியவற்றை கொண்டது.

பட்ஜெட் மீது எதிர்ப்பார்ப்பு
2017-19-ல் 34,862.46 கோடி ரூபாய், உயர்கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டின் விகிதம் 1.62 சதவீதத்திலிருந்து, 1.43 சதவீதமாக குறைந்துவிட்டது. உயர் கல்வி பட்ஜெட்டில், 2017-18ல் மத்திய பல்கலைக் கழகங்களுக்கு ரூ .7,261.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018-19ல் ரூ. 6,445.23 கோடியாக இருந்தது. ஐஐடிகளுக்கு 2017-18ல் ரூ .7,503.5 கோடியில் இருந்து ரூ. 5,613 கோடியாகவும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருந்தது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here