ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

ஜாக்டோ -ஜியோ, அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. 
பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் வாபஸ் பெறுவதாக  சென்னை – திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ -ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 7 வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி ஜன.22-ம் தேதி முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிகள் முடங்கின.

இதையடுத்து தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். இதனையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. எனவே நேற்று காலை முதல் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 3520 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தகவல் அளித்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதால், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் வாபஸ் பெறுவதாக  அறிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here