அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை அடக்குமுறை மூலம் தீர்வு காண நினைப்பது கொடூரம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. மாணவர்களின் நலன்கள் பற்றியோ, அறவழியில் போராடுவோரின் கோரிக்கைகள் பற்றியோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்து போராட்ட உணர்வை மேலும் தூண்டிவிடுகிறார். இது மிகுந்த  வேதனை அளிக்கிறது. அமைச்சர்களின் பொறுப்பற்ற செயல் மட்டுமின்றி, முதல்வரின் பாராமுகம் போராட்டத்தை இவ்வளவு தீவிரமாக்கியிருக்கிறது.
போராட்டத்தில் பங்கேற்றிருப்பவர்களின்  கோரிக்கைகள் குறித்து அக்கறை செலுத்தி தீர்வு காண முயற்சிக்காமல்  வெறும் அடக்குமுறை நடவடிக்கைகளை மட்டும் கட்டவிழ்த்து விட்டு பிரச்னைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்று நினைப்பது கொடூரமான மனிதநேயமற்ற மனப்பான்மையாகும்.
பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் தீர்வுதான் இப்பிரச்னைக்கு  நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற அடிப்படை உண்மையைக்கூட புரிந்து கொள்ளாமல் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுதான் இப்போது முக்கியமே தவிர அதிமுக அரசு மற்றும் அமைச்சர்களின் கெளரவம் அல்ல என்பதை மனதில் நிறுத்தி இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்.
 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள்  முறையான பேச்சுவார்த்தை மூலம்  நிறைவேற்றப்படுவற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.  அதிமுக அரசு எடுத்து வரும் சட்டவிரோத, அடக்குமுறை நடவடிக்கைகள் எல்லாம் நிச்சயம் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here