தேர்வு நெருங்குவதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப முடியுமா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜாக்டோ ஜியோ கடந்த முறை நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வழக்குரைஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, “மாணவர்களின் நலன் மீது ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா?, ஆசிரியர்கள் தொழிலாளிகளைப் போல சாலையில் இறங்கி போராடுவது அழகா?, பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.
எனவே பெற்றோரான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடும் வரை அவர்களது குழந்தைகளுக்கு கற்பிக்கக்கூடாது? என உத்தரவிட்டால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா?’ என கேள்விகளை எழுப்பினார். 
 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைவான ஊதியமும், அதிகமான வேலைப்பளுவும் கொடுக்கப்படுவது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியுமா?, உயர்நீதிமன்றத்தின் துப்புரவுப் பணி மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு எத்தனை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்து போட்டியிடுகிறார்கள் தெரியுமா? போலீஸார் கடமையைச் செய்யத் தவறினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். டாக்டர்கள் கடமையைச் செய்யத் தவறினால் மக்களின் உடல்நலம், சுகாதாரம் பாதிக்கப்படும். ஆனால் ஆசிரியர்கள் கடமையைச் செய்யவில்லை என்றால் அது அடுத்த தலைமுறையையே பாதிக்கும்’ என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
அப்போது வழக்குரைஞர் ஜி.சங்கரன், கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இது. எங்களது கோரிக்கையை பரிசீலிக்காமல் அரசு அமைதியாக உள்ளது. மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்துக்கும் மாநில அரசு பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது.
அனைத்து கோரிக்கைகளையும் தீர்க்க கோரவில்லை, குறைந்தபட்சம் அரசு  பேச்சுவார்த்தை நடத்தலாம். அதைக்கூட செய்யாமல் அரசு பிடிவாதம் பிடித்து வருவதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, “மற்ற மாநிலங்களில் கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா? ஓய்வூதியம் இல்லை என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு தானே பணியில் சேர்ந்தீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
மேலும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஒவ்வோர் ஆண்டும் கிடப்பில் போடுவதை  ஏற்க முடியாது. எனவே அவர்களது கோரிக்கையை அரசு கவனம் செலுத்தி உரிய தீர்வைக் காண வேண்டும். மேலும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையின்  இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தனிநீதிபதியான நான் இருநீதிபதிகள் கொண்ட அமர்வின் அதிகாரத்தில் தலையிடவோ, உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது.
தேர்வு நெருங்குவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்குத் திரும்ப முடியுமா என்பது குறித்து ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பிலும், ஆசிரியர்கள் மட்டும் பணிக்குத் திரும்புவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பிலும் செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.29) தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here