10% இடஒதுக்கீடு: பிப்ரவரி 1 முதல் அமல்!

முன்னேறிய சமூகத்தினருக்குப் பொருளாதார ரீதியாகக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பிப்ரவரி 1 முதல் அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னேறிய சமூகத்தினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு ஜனவரி 8ஆம் தேதி மக்களவையிலும், 9ஆம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதனையடுத்து இந்த இடஒதுக்கீட்டை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்துமாறு மத்திய பணியாளர் அமைச்சகம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், ‘முன்னேறிய சமூகத்தினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்கள், கல்வி மற்றும் சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் வராத, ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு உட்பட்ட வருவாய் மதிப்பை உடைய பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய மக்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது” என்று சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னேறிய சமூகங்களைச் சேர்ந்த தனிநபரோ அல்லது குடும்பமோ ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு மேல் நிலம் வைத்திருந்தால் இந்த இடஒதுக்கீட்டைப் பெற இயலாது. இந்த இடஒதுக்கீட்டில் பயன்பெறப் போகிறவர்களின் உரிய ஆவணங்களைக் கவனமாக சரிபார்க்க வேண்டுமென்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல கல்வி நிறுவனங்களில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய மனிதவள அமைச்சகமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here