9 வயதில் 14 உலக சாதனைகள் – டாக்டர் பட்டம் பெறும் நெல்லை சிறுமி

நெல்லை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் கார்த்திக்கேயன் – தேவிபிரியா தம்பதியரின் 8 வயது மகள் பிரிஷா. இவர் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது 1 வயதில் இருந்தே தன்னுடைய பாட்டி மற்றும் தாயிடம் இருந்து யோகாசனங்களை கற்று வந்துள்ளார். 5 வயதில் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய சர்வதேச அளவிலான யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
கண்டபேருண்டாசனத்தை 1 நிமிடத்தில் 16 முறைகள் விரைவாக செய்து முதல் உலக சாதனையும், லோகஸ்ட் ஸ்கார்ஃபியன் போஸ் யோகாசனத்தை 3.02 நிமிடத்தில் செய்து 2வது உலக சாதனையும், ராஜகபோட்டாசனத்தை 5.13 நிமிடத்தில் செய்து 3வது உலக சாதனையும் புரிந்துள்ளார். 2018ல் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகாசனப் போட்டியில் தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு தங்கப்பதக்கங்களை வாங்கியது மட்டுமின்றி யோகா ராணி, யோகா கலா, யோகா ஸ்ரீ, யோகா சாதனா, யோகா நட்சத்திரா, சாதனை செல்வி, இளம் சாதனையாளர், யோகா செல்வி, யோகா லிட்டில் ஸ்டார் அவார்டு போன்ற பல்வேறு பட்டங்களையும்
பெற்று சாதனை படைத்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் அன்று நீச்சல் குளத்தில் நீச்சலுடன் கூடிய வாமதேவ ஆசனம், ஏக பாத வாமதேவ ஆசனம், பத்மாசனம், குப்தபத்மாசனம், சுப்த பத்மாசனம், நீருக்குள் யோகாசனம் உள்ளிட்ட 8 உலக சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தினார். 
யோகாசனத்தை தண்ணீருக்கு வெளியே பலர் செய்துள்ள நிலையில், மிகவும் சிறு வயதில் தண்ணீருக்குள் இருந்தபடியே செய்து சாதனை படைத்தார். இதற்காக இவருக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வேலூரில் டாக்டர் பட்டம் பெறுகிறார். தனது மகள் படைத்த சாதனைகளைவிட வேறு பெருமை மற்றும் சந்தோசம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கின்றார் பிரிஷாவின் தாய் தேவி பிரியா.
பிரிஷா யோகாவில் மட்டுமின்றி படிப்பு, நடனம், கராத்தே, ஓவியம் வரைதல் என அனைத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்கிறார்.
டாக்டர் பட்டம் வாங்குவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக சிறுமி தெரிவித்துள்ளார். பட்டம் வாங்கியதை தொடர்ந்து கிராமங்களை தத்தெடுத்து யோகா, உடல் நலம் மற்றும் சுகாதார விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார். மேலும் ஏழை மாணவர்களுக்கு இலவச யோகா வகுப்பு எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here