தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் தொடங்கப்பட்ட மாணவர் காவல் படையினருடன் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர்

சென்னையில் மாணவர் காவல் படை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வையும், நல்ல சிந்தனையையும் வளர்க்கும் வகையில் தமிழக காவல்துறை, வருவாய்த் துறை,பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து மாணவர் காவல் படை என்ற புதிய மாணவர் படையை உருவாக்கியுள்ளன.
இந்த மாணவர் படையில் சென்னையில் 138 பள்ளிகளைச் சேர்ந்த 6,072 மாணவ-மாணவிகள் இணைந்துள்ளனர். இப்படையில் சேரும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு, சமூகத் தீமைகளுக்கு எதிராகப் பணிபுரிதல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற மாணவ – மாணவியர், சென்னை காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
மேலும் இந்த படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்பார்கள்.
தொடக்க விழா: இதன் தொடக்க விழா, வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம் மற்றும் சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் (வடக்கு) வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாணவர் படையை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து காவல் ஆணையர் விசுவநாதன் பேசியது: மாணவர் காவல் படைத் திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்களை மிகச் சிறந்த குடிமக்களாக உருவாக்க பள்ளி கல்வித்துறை, வருவாய்த்துறை,காவல்துறை ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
தமிழகத்தில் முதலாவதாக…தமிழகத்திலேயே மாணவர் காவல் படை இங்குதான் முதன் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாக 138 பள்ளிகளில் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இனி இத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இத் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களிடம் காவல்துறை செயல்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாணவர்களின் பணிச்சுமையை அதிகரிக்காத வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர் காவல்படை மூலம் மாணவர்களின் உடல் ஆரோக்கியம்,சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவை மேம்படுத்தப்படும். இதன் மூலம் மாணவர்களிடம் கடின உழைப்பு,திறன் ஆகியவை அதிகரிக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அதிகாரி: இத் திட்டத்தில் உள்ள மாணவர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து சட்டம்- ஒழுங்கு பராமரித்தல், சமூக பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, சாலை விதிமுறைகள் அமல்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.
இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்போது, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு காவல்துறை அதிகாரி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்றார் அவர்.
இந் நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையர்கள் மகேஷ்குமார் அகர்வால்,ஆர்.தினகரன்,துணை ஆணையர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா,எஸ்.சரவணன்,எஸ்.மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here