ஊதியமும் முரண்பாடுகளும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியாயமான ஊதியம் கோரியும், ஊதிய முரண்பாடுகளை களையக் கோரியும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

இப்பிரச்சனைக்கு உரிய தீர்வுகாண சங்கங்களை அழைத்துப் பேச வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு மாறாக ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் பரிந்துரையின்பேரில் ஊதிய மாற்றங்களை செய்து வருகிறார்கள். இதனால் நியாயமான ஊதிய மாற்றம் நிகழ்வதற்கு பதிலாக புதிய, புதிய முரண்பாடுகள் உருவாகி வருகின்றன.

எனவே, நியாயமான ஊதியம் கோரியும், ஊதிய முரண்பாடுகளை களையக் கோரியும் நீடித்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இவ்வாறான அரசின் அணுகுமுறைகள் காரணமாக நீடித்த போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சங்கங்களை அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்கு பதிலாக “அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எப்போது பார்த்தாலும் தங்களது ஊதியத்திற்காகவே போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்,

அரசின் வருவாய் 90 சதவீதத்திற்கும் மேலாக ஊதியத்திற்கே சென்று விடுகிறது” என்று ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள்.

இதன் மூலம் மக்களுக்கும், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கும் இடையே மோதல் போக்கை ஆட்சியாளர்களே உருவாக்குகிறார்கள்.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காக உண்மையில் ஆகும் செலவு தமிழக அரசின் 2014-15 பட்ஜெட்படி பார்த்தால் 20 சதவீதத்திற்கும் குறைவே.

அரசு நிர்வாகத்தின் அச்சாணியாகவும், முகமாகவும், மனமாகவும் இருந்து அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கிற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாகச் செலவிடப்படும் தொகை 20 சதவீதம் என்பது மிகவும் நியாய மானதே என்பது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும், அடிப்படையானதும் கூட. இந்நிலையில்

அரசே இத்தகைய தவறான பிரச் சாரங்களை மேற்கொள்வது என்பது நாகரிகமான செயல் அல்ல. இத்தகைய தவறான பிரச்சாரங்கள் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், “திமுக அரசு வந்தால் ஊதியக் குழுக்கள் அமைக்கப்படும், ஊதிய உயர்வு கிடைக்கும் என்ற ஒரு தவறான கருத்தோட்டம் அரசு ஊழியர்கள் மத்தியில் பரப்பப்படுகிறது.

உண்மையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாகவே தமிழகத்தில் ஊதிய மாற்றத்திற்கான குழுக்கள் அமைக்கப்பட்டது என்பதே நிதர்சன மான உண்மையாகும்.

மேலும், கடந்த ஊதிய மாற்றத்தின்போது ஓராண்டு நிலுவைத் தொகையினை வழங்க மறுத்ததும், பல்வேறு ஊதிய முரண்பாடுகளை உருவாக்கியதும் திமுக அரசே என்பதும், தொடர்ந்து முரண்பாடுகளைக் களைய மறுத்து நீடிக்கச் செய்திருப்பது அதிமுக அரசே என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.

மருத்துவக் காப்பீடு – உயிர் வணிகமே…

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படியினை உயர்த்தி வழங்க வேண்டுமென தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால்,

இக்கோரிக்கையை பரிசீலிக்காமல் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை கடந்த 2007ஆம் ஆண்டு திமுக அரசு முதலில் அமல்படுத்தியது.

இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறுவதில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்று வரை எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். ஊழியர் நலனுக்கெதிராக தனியார் நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும் என அரசு ஊழியர்-ஆசிரியர் இயக்கங்கள் தொடர்ந்து இன்றும் போராடி வருகின்றன.

ஆனாலும் திமுக அரசு அன்று அக்கோரிக்கையை ஏற்கவில்லை.

இந்நிலையில், அடுத்து 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஏற்கனவே திமுக கொண்டு வந்த திட்டங்கள் பலவற்றை “திமுக அரசு கொண்டு வந்தது என்பதற்காகவே” ரத்து செய்து வந்த அதிமுக அரசு, இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் ரத்து செய்ய மறுத்துவிட்டது.

இன்றளவும் இத்திட்டம் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு ஊழியர்-ஆசிரியர்களின் உடல் நலமானது வணிகமயமாக்கப்பட்டதனால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு அரசுகளுமே ஏற்கவில்லை. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் உயிரை வணிகமயமாக்கிய முதல் குற்றவாளியாக திமுகவும், இரண்டாவது குற்றவாளியாக அதிமுகவும் உள்ளது.

ஆளுங் கட்சியின் அத்துமீறல்கள்
அரசுத் துறை அலுவலகங்களில் ஆளுங் கட்சியினரின் அத்துமீறல்களும், அடாவடித் தனங்களும் கடந்த பல ஆண்டுகளாக தங்குதடையின்றி அரங்கேறி வருகிறது. இதில் ஆட்சியில் இருப்பது திமுகவா, அதிமுகவா? என்ற பேதம் எதுவுமில்லை. அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து அரசுப் பணிகளில் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு நிர்ப்பந்தங்களை அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பதோடு, நேர்மை யாகப் பணியாற்றும் ஊழியர்களை மிரட்டுவது, அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது என ஏராளமான அத்துமீறல்களை இரு ஆட்சிகளிலுமே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here