மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்; போராட்டம் நடக்கும்’ – ஜாக்டோ ஜியோ திட்டவட்டம்!

பி.ஆண்டனிராஜ் எல்.ராஜேந்திரன்

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் மக்கள் பிரச்னைகள் தீர்க்கவில்லை. அதனால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் அதிகமாக நடக்கின்றன என தெரிவித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்திட வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் உடனடியாக இணைப்பதன் மூலம் தொடக்கக் கல்விக்கு மூடு விழாவில் நடத்துவதையும் 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக நாளை முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்க உள்ளது.

ஜாக்டோ-ஜியோ சுப்பிரமணியன்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாளை முதல் நடக்க இருக்கும் இந்தப் போராட்டம் குறித்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான சுப்பிரமணியன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்குப் பலமுறை தெரியப்படுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்தை ஈர்த்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் நாங்கள் மீண்டும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், எங்களை மிரட்டும் வகையில் தலைமைச் செயலாளர் ஒரு கடிதம் வழங்கியிருக்கிறார். அதில், ‘வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடும் நாள்களுக்குச் சம்பளம் ரத்து செய்யப்படும்’ என மிரட்டல் விடுத்திருக்கிறார்.

ஆனால், நாங்கள் இந்த அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சப்போவதில்லை. திட்டமிட்டபடி போராட்டத்தில் பங்கேற்போம். நாளை முதல் தமிழகத்தில் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதனால் வணிக வரித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படும். நாளை வட்ட அளவில் ஆர்ப்பாட்டமும் 23 மற்றும் 24-ம் தேதிகளில் வட்ட அளவில் மறியல் போராட்டமும் நடத்தப்படும். 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

செய்தியாளர்களுக்கு பேட்டி

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேடைகளில் தெரிவித்து வருகிறார். ஆனால், தமிழகத்தில்தான் அதிகமான போராட்டங்கள் நடக்கின்றன. குறிப்பாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதற்காகப் போராடினால் தமிழக அரசு மிரட்டுகிறது தமிழகத்தில் பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, எங்கள் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம்’’’எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here