*செய்தி குறிப்பு*
*20.01.2019*

*தமிழக முதல்வர் அழைத்து பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி JACTTO -JEO வேலைநிறுத்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்*

*அவ்வாறு அழைத்து பேசவில்லை என்றால் வருகின்ற 22.01.2019 அன்று முதல் ஜாக்டோ ஜியோ நடத்துகின்ற காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு* –

*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அறிவிப்பு*

மத்திய அரசு 31.12.2003 அறிவிப்பு செய்து 01.01.2004 முதல் பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஊதியத்தை கொண்டுவந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

புதிய பங்களிப்பு ஊதியம் என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் 10 விழுக்காட்டை பிடித்தம் செய்து, பிடித்தம் செய்த ஊதிய பணத்தை கணக்கிட்டு அதே தொகையை அரசு ஈட்டி, அந்த தொகையை பங்கு சந்தையில் செலுத்துகிறது.

பங்கு சந்தையில் செலுத்தும் பணம் எந்த கணக்கில் இருக்கிறது என்று இதுவரை அரசு தெரிவிக்கவில்லை. அப்படி இருந்தாலும் பங்குசந்தை என்பது லாபம் ஈட்டினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையானது கிடைக்கும். பங்குசந்தை நட்டத்தில் சென்றால் எங்களின் நிலை என்னவாகும் என்று அரசு புரிந்துக் கொள்ளவேண்டும்

பங்களிப்பு ஓய்வூதியத்தில் ஒருவர் ஓய்வு பெற்றால், உதாரணத்திற்கு 8 லட்சம் பணப்பயன் பெறுகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அதனை எத்தனை வருடத்திற்கு பயன்படுத்த முடியும்? அவர் வாங்கிய கடன் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு அதனை பங்கிட்டு கொடுக்கவே அது சரியாக இருக்கும்.

அவர் ஓய்வு பெற்ற பின் அவரது வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவிடுகின்றது. அதே ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரமோ ரூ. 15 ஆயிரமோ பெற்றால் வாழ்நாளை பட்டினி இல்லாமலாவது கழிக்க இயலும்.இதனை
தமிழக அரசு நன்கு புரிந்துக் கொள்ளவேண்டும்.

அதேபோன்று 7 வது ஊதியக் குழு அறிவித்து, அந்த ஊதியத்தை மாற்றம் செய்தது. அதன்படி 21 மாதம் எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை எங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் அனைத்து துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பல கோரிக்கைகள் வைத்தும் போராடியும் அரசு சற்றும் செவிசாய்க்க மறுக்கிறது.

மாறாக அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நசுக்க நினைத்து, பிரிவு 56 ஐ பயன்படுத்தி, அரசு உத்தரவை நடைமுறை படுத்தி ஆட்குறைப்பு செய்து வருங்கால சந்ததியினரின் வேலைவாய்பை கேள்விக்குறி ஆக்கிவிட்டது.

அதுமட்டுமின்றி அங்கன்வாடி மையங்களை மூடி, தொடக்க நடுநிலைப்பள்ளிகளை இணைத்து பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பவும், இடைநிலை ஆசிரியர்களை தகுதி இழக்க செய்து அங்கவாடி மையங்களுக்கு அவர்களை பணியமர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களை நசுக்குகின்ற எண்ணத்தை கைவிட்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக அவர்களை பேச்சு வார்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி, நடைபெறவிருக்கும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

அப்படி அழைத்து பேசி தீர்வுகாண வில்லை என்றால் வருகின்ற 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ நடத்துகின்ற காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு* அளித்து, அதில் பங்குபெறும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

*சா.அருணன்*
*நிறுவனத் தலைவர்*
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here