மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சொந்த உதவியாளரை அழைத்துச் செல்லலாம்: புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது யுஜிசி

மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குச் செல்லும்போது, சொந்த உதவியாளரை (ஸ்கிரைப்) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவியாளர் ஒருவர் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 இதுவரை தேர்வை நடத்தும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் சார்பாக மட்டுமே உதவியாளர் வழங்கப்பட்டு வந்தார்.

 மேலும், இளநிலை, முதுநிலை பட்டத் தேர்வுகளை எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கும், பத்தாம் வகுப்பு தகுதி பெற்ற உதவியாளர்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தனர்.

இதனால், மாற்றுத்திறனாளிகள் கூறும் சில தொழில்நுட்ப வார்த்தைகளை இந்த உதவியாளர்கள் புரிந்துகொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இதனால், சில மாற்றுத்திறனாளிகள் தேர்வில் தோல்வியடையும் நிலையும் நிலவி வந்தது.

இதன் காரணமாக தகுதியுள்ள உதவியாளர்களை வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதலை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.

 இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள யுஜிசி, போட்டித் தேர்வுகளுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகளுக்கும் இந்த வழிகாட்டுதலையே பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அதில், பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்திடம் உதவியாளரைக் கேட்கலாம். அல்லது சொந்த உதவியாளரை தாங்களே அழைத்து வரலாம் என தெரிவித்துள்ளது.

அவ்வாறு அழைத்து வரப்படும் சொந்த உதவியாளர், தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளியின் கல்வித் தகுதியைவிட ஒரு படி கீழே இருக்க வேண்டும்.

மேலும், இந்த உதவியாளர் குறித்த முழு விவரத்தையும் அந்த மாற்றுத்திறனாளி சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை, தேர்வு நடத்தும் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்யும் உதவியாளராக இருந்தால், அவர் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதியுடையவராக இருத்தல் அவசியம்.

 மேலும், இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் உதவியாளரை தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி சந்திக்க அனுமதித்து, இந்த உதவியாளர் தனக்கு ஏற்றவராக இருப்பாரா என்பதை சோதித்துக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் அந்த உதவியாளரை மாற்றிக் கொள்ளவும், ஒவ்வொரு பாடத்துக்கும் வெவ்வேறு உதவியாளரை நியமித்துக் கொள்ளவும் அனுமதிக்கவேண்டும்.

தரைத் தளத்தில் தேர்வு அறை:

தேர்வு அறைகளைப் பொருத்தவரை, மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லக் கூடிய வகையில் அமைக்க வேண்டும். முடிந்தவரை இவர்களுக்கான தேர்வு அறை தரைத் தளத்தில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

 மேலும், தேர்வு அறையில் பேசும் கால்குலேட்டர், பிரெய்லி ஸ்லேட், அபாகஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், பிரெய்லி அளவிடும் டேப் ஆகியவற்றை குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதலுக்கு மாற்றுத்திறனாளிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளபோதும், முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளைத் தலைவர் பி.சிம்மச்சந்திரன் கூறியது:
புதிய வழிகாட்டுதலில் மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதும்போது சொந்த உதவியாளரை நியமித்துக்கொள்ளலாம் என்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வறை தரைத் தளத்தில்தான் அமைக்கப்படவேண்டும் என்பது வழிகாட்டுதலில் உறுதியாகக் கூறப்படவில்லை.

 முடிந்தால் அமைக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என்றார்.

இதுகுறித்து டிசம்பர் 3 இயக்க மாநிலத் தலைவரும், தனியார் கல்லூரி பேராசிரியருமான தீபக் கூறியது:

சொந்த உதவியாளர், தேர்வில் கூடுதல் நேரம், உதவி உபகரணங்கள் பயன்படுத்துதல் என வழிகாட்டுதலில் கூறப்பட்டிருக்கும் அனைத்தும் மிகுந்த வரவேற்புக்குரியது. ஆனால், இவை அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

மேலும், இந்த வழிகாட்டுதல் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என யார் கண்காணிப்பது என்பதற்கு தெளிவான விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

 எனவே, இந்த வழிகாட்டுதல் முழுமையாகப் பின்பற்றப்பட்டால், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு நிச்சயம் முன்னேறும் என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here