தேர்வில் முறைகேடு செய்த பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்க எதிர்ப்பு

தேர்வில் முறைகேடு செய்த பள்ளிகளில், தேர்வு மையம் அமைக்க, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச்சில் துவங்குகின்றன; 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான ஆயத்த பணிகளில், அரசு தேர்வு துறை இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது. 

இதற்காக, மாநிலம் முழுவதும், 3,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில், 1,500 தேர்வு மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளன.கடந்த காலங்களில், பல தனியார் பள்ளி தேர்வு மையங்களில், ‘பிட்’ அடிக்கவும், மற்ற மாணவர்களை பார்த்து, ‘காப்பி’ அடிக்கவும், வசதி செய்தது அம்பலமானது. சில பள்ளிகளில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களே, விடைகளை எழுதி கொடுத்ததும் தெரிய வந்தது. இது போன்ற முறைகேடுகள் நடந்த தனியார் பள்ளிகளில், மீண்டும் தேர்வு மையங்கள் அமைக்க, அனுமதி வழங்கப்படுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்கள், கடும் சிக்கல்களை சமாளித்து, தேர்வுக்கு தயாராகின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில், பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளித்து, மாணவர்களை தயார் செய்கின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கவும், மதிப்பெண் உயரவும், முறைகேடுகளுக்கும், சில பள்ளிகள் உடந்தையாக உள்ளன.அதனால், சிரத்தையாக படித்து, நேர்மையாக தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, முறைகேடுக்கு வழிவகை செய்யும் பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது. அந்த பள்ளிகளின் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு மையங்களை, தீவிர கண்காணிப்பு மையங்களாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here