கல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி

கல்வித்துறையில் 45 டி.இ.ஓ.,க்கள் (மாவட்ட கல்வி அலுவலர்) பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொதுத்தேர்வுகள் பணிகளுக்கு தயாராவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச் 1ல் பிளஸ் 2, மார்ச் 6ல் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு 14ல் துவங்குகின்றன. தேர்வுப் பணிகள் கண்காணிப்பு மற்றும் முன்தயாரிப்பு பணிகளில் டி.இ.ஒ.,க்கள் பங்கு முக்கியமானது. 

மாநிலத்தில் மொத்தமுள்ள 120ல் தற்போது 45 டி.இ.ஓ.,க்கள் பணியிடம் ஆறு மாதங்களாக காலியாக உள்ளன. இவ்விடங்களில் பொறுப்பு டி.இ.ஓ.,க்களாக தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இரட்டை பணிகளால் பள்ளியையும் கவனிக்க முடியாமல், நிர்வாகத்திலும் முழு அளவில் செயல்பட முடியாமல் தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர். 

பொது தேர்வுகளுக்கு முன் செய்முறை தேர்வுகள் பிப்.,யில் துவங்கவுள்ளன. இதனால் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படும். மேலும் ஜாக்டோ ஜியோ சார்பில் வரும் 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது முதல் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தேர்வுப் பணிகள் கடும் சவாலாக மாறும் சூழ்நிலை உள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், “டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை விரைவில் நிரப்பினால் தான் தேர்வு பணிகள் எளிதாக இருக்கும். பணியிடம் நீண்டகாலமாக நிரப்பாத சூழ்நிலையில் பதவி உயர்வு பெறாமலேயே தலைமையாசிரியர் பலர் ஓய்வு பெறுகின்றனர். டி.இ.ஓ., ஓய்வு பெற்ற மறுநாளே அப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here