பொது தேர்வில், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க, தேர்வறையில் மேஜை மற்றும் நாற்காலிகளை சோதனை செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், மார்ச், 1ல் பொது தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான முன் ஏற்பாட்டு பணிகளில், பள்ளி கல்வி மற்றும் தேர்வு துறை ஈடுபட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கண்காணிப்பு மற்றும் தேர்வு சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், தேர்வில் நடந்து கொள்ளும் முறைகள் குறித்து, ஆசிரியர்களுக்கு அவ்வப்போது வழிகாட்டுதல்களை, தேர்வு துறை வழங்குகிறது. தற்போது, முறைகேட்டை தடுப்பதற்கான வழிகாட்டுதலை, தேர்வு துறை அறிவித்துள்ளது. இதன்படி, தேர்வு மையங்கள் அமைக்கப்படும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் யாரும், தேர்வு நேரத்தில், தேர்வு மையத்தில் இருக்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், பறக்கும் படையினர், தலைமை கண்காணிப்பாளர்கள் போன்றோர், தேர்வு துவங்கும் முன், தேர்வறையில் கடும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேஜை, நாற்காலி, மாணவர்கள் அமரும் பெஞ்ச், எழுதும் மேஜை, ஜன்னல் ஓரங்கள், கதவுகள் போன்றவற்றிலும் சோதனையிட்டு, ‘பிட்’ இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். நுாறு சதவீதம் முறைகேடு நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, தேர்வு துறை நிபந்தனை விதித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here