தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வரும் 22ம் தேதியில் இருந்து ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்!

 தமிழக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஐகோர்ட்டில் அளித்த தங்களது உத்தரவாதத்தை திரும்ப பெற்று, வருகிற 22ந்தேதி முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.

 பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த டிச. 4 முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தும், தடை விதிக்கக்கோரியும் இரு மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை டிச. 3ல் ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்தது.  அப்போது நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று, வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கவில்லையென ஜாக்டோ-ஜியோ உத்தரவாதம் அளித்தது.

இதையடுத்து, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றம் தொடர்பாக கடந்த 21.9.2017ல் பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு எடுத்த அரசின் நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டது. பின்னர், அரசு தரப்பில் பழைய பென்ஷன் திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, பழைய பென்ஷன் திட்டம் தொடர்பான தர் கமிட்டி அறிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் ஊதிய முரண்பாடுகள் மற்றும் 21 மாத அகவிலைப்படி (அரியர்ஸ்) வழங்குவது குறித்து விசாரித்த சித்திக் குழுவின் அறிக்கையையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘‘பழைய பென்ஷன் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க 6 மாத கால அவகாசம் வேண்டும்.

சித்திக் குழு அறிக்கை மீதான நடவடிக்கைக்கு  4 வாரம் அவகாசம் வேண்டும்’’ என்றார். அப்போது ஜாக்டோ – ஜியோ சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘‘எங்களது போராட்டம் கடந்த டிசம்பரிலேயே முடிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் கேட்டுக்கொண்டதால் இரண்டாம் முறையாக கைவிடப்பட்டது. ஏற்கனவே ஒரு முறை போராட்டத்தை கைவிட்டோம். அரசும், தலைமை செயலரும் நீதிமன்றத்தில் ஆஜராகி உறுதி அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேண்டுமென்றே காலம் தாழ்த்துகின்றனர். இப்போது அவகாசம் கேட்கும் காலத்தில் பள்ளி தேர்வுகளும், நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளும் துவங்கி விடும். இதனால், நீதிமன்றத்தின் மூலமும் தீர்வு கிடைக்காத நிலையே ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களது போராட்டத்தை தொடர்வதே சரியாக இருக்கும்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘கமிஷன் அறிக்கை, அரசின் அறிக்கையைப் போல உள்ளது’’ என்றனர். பின்னர், சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க நீதிபதிகள் அவகாசம் அளித்தனர். இதன்பிறகு சங்க தரப்பு வக்கீல், ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதில், போராட்டத்தை துவக்கவில்லையென ஏற்கனவே அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை திரும்ப பெற்றுக் ெகாள்வது என நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

பின்னர், நீதிபதிகள் முன் ஆஜரான மூத்த வக்கீல், ‘‘நீதிமன்றத்துக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு ஆகியும் தீர்வு கிடைக்கவில்ைல. இதனால் அரசை எதிர்த்து போராட்ட களத்தில் இறங்குவதே சரியாக இருக்கும். எனவே, எங்களது உத்தரவாதத்தை திரும்ப பெறுகிறோம்’’ என்றார்.

இதை ஏற்ற நீதிபதிகள், சித்திக் கமிஷன் அறிக்கை அடிப்படையில் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன. 28க்கு தள்ளி வைத்தனர்.
நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை அரசு ஊழியர்கள் திரும்ப பெற்றதன் மூலம், ஏற்கனவே அறிவித்தபடி ஜன. 22ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here