அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கக்கூடிய அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை வரும் 21ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மானிய கோரிக்கையின் போது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். இதேபோல், 2019 ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் இது முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார். அதன்படி, தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில்  இயங்கக்கூடிய அங்கன்வாடி மையங்களில் ஜனவரி முதல் எல்.கே.ஜி, யு.கேஜி  வகுப்புகள் செயல்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி முதல் செயல்பட உள்ள இந்த  வகுப்புகளுக்கு 7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் 21ம் தேதி இந்த திட்டத்தை சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பள்ளியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். பின்னர், இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இந்த திட்டத்தின்படி 7.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 52 ஆயிரம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். அடுத்த கல்வி ஆண்டில் இதை 1 லட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு புது யூனிபார்ம்களும் கொடுக்கப்பட உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க பள்ளிகல்வி துறை ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியரையும் நியமிக்க உள்ளது. வரும் 21ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பள்ளியில் முதல்வர் இத்திட்டத்தை தொடங்கிவைக்க உள்ளார். இவ்வாறு கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here