அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?
அலெக்ஸ் தெரியன் & ஜேன் வேக்ஃபீல்ட்
பிபிசி

குழந்தைகள் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக குழந்தை நல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்ப கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவர பரிசோதித்த பெற்றோர்கள் பெரியளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் எப்போதெல்லாம் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க வரப்புகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டுமென்றும், குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

தொழில்நுட்ப கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரமானது, அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையில் பாதிக்காத வகையில் இருக்கவேண்டுமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

‘பிஎம்ஜே ஓபன்’ என்னும் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்த ஆராய்ச்சிக்காக தொலைக்காட்சி பெட்டி, அலைபேசி, கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்ப கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 14 வயதுடைய இருபாலின குழந்தைகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றில், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களை விட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

‘குறிப்பிடத்தக்க ஆதாரம் இல்லை’
பிரிட்டனிலுள்ள ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.

அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப்போன்று தொழில்நுட்ப கருவிகளின் திரைகளில் நேரத்தை செலவிடுவது உடல்நலனுக்கு “மோசமான” விளைவை உண்டாக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் நேரத்தை செலவிடுவதற்கும், உடற்பருமன், மனஅழுத்தம் போன்றவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

குங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்குமா?
திருமணம், குழந்தை பேறை விரும்பாத தென் கொரிய பெண்கள் – காரணம் என்ன?
இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் காலேஜ், உடற்பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை என்று தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் உடலநலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தை செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாக கூறும் வகையிலான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் “உலகை நன்றாக தெரிந்துகொள்வதற்கு” பயன்படும் அலைபேசிகள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் காலேஜை சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.

“நாங்கள் இந்த ஆய்வுக்காக உருவாக்கிய கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் கவலை ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருங்கள்.”

“ஒருவேளை கேள்விக்கான பதில்கள் சங்கடத்தை ஏற்படுத்தினால், மின்னணு திரைகளில் செலவிடும் நேரம் குறித்து நீங்கள் ஆழ்ந்து யோசிக்க வேண்டுமென்று” அவர் மேலும் கூறுகிறார்.

மின்னணு காலத்திற்கேற்ற குழந்தை வளர்ப்பு குறிப்புகள்

குழந்தைகள் எவ்வளவு நேரம் மின்னணு திரைகளில் செலவிடலாம்; எவற்றையெல்லாம் பார்ப்பதற்கு அனுமதியுண்டு என்று திட்டமிட்டு தெளிவுற குழந்தைகளுக்கு விளக்குங்கள்

குழந்தைகள் இணையதளத்தில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்தும், என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்தும் விளங்க வையுங்கள்.

குழந்தைகளிடம் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களுடன் சமூக இணையதளங்களில் தொடர்புகொள்வதற்கு ஊக்குவியுங்கள்.

இணையத்தில் ஒன்றை கிளிக் செய்வதற்கு முன்னர் சிந்திக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு கற்பியுங்கள்.

குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ தவறான விடயங்களை இணையதளங்களில் பார்ப்பதை தடுக்கும் மென்பொருள்களை பயன்படுத்துங்கள்.
சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை பகிர்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து குழந்தைகளுக்கு தெளிவாக விளக்குங்கள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here