தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில், தொடக்கப்பள்ளிகளில் உபரியாக அடையாளம் காணப்பட்ட ஆசிரியைகளை நியமிக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏழை மக்களின் குழந்தைகளும் மழலையர் வகுப்புகளில் படிக்க வேண்டும். எனவே தனியார் பள்ளிகளைப் போன்று அரசு தொடக்கப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதல் கட்டமாக 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அதில் 52,933 குழந்தைகள் சேர்க்கப்படுவர் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில், இவர்களுக்கு பாடம் கற்பிக்க தமிழகம் முழுவதும் ஒன்றியங்களில் உபரியாக உள்ள ஆசிரியைகள் விவரங்களைக் கேட்டு தமிழக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பாடம் போதிக்க ஒரு பெண் ஆசிரியையை ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். ஏற்கெனவே, அந்தந்த மாவட்டங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உபரியாக உள்ள ஆசிரியர்களில் ஒரு மையத்திற்கு ஒரு ஆசிரியை வீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும்.
அவ்வாறு செய்யும்போது, அந்தந்த ஒன்றியங்களிலிருந்தும் ஆசிரியைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒன்றியங்களில் இடைநிலை ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அருகிலுள்ள ஒன்றியங்களில் பணிமூப்பு (சீனியாரிட்டி) மாறாதவாறு ஒதுக்கீடு செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து நியமிக்கப்படவுள்ள ஆசிரியைகள் அங்கன்வாடி மையங்களில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவார்கள் என்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here