வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல்!


விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைப்பதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், வங்கிகள் இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நேற்று (ஜனவரி 2) டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் முதன்முறையாக மூன்று வங்கிகள் இணைப்பு நடைபெறவுள்ளது. விஜயா மற்றும் தேனா வங்கி ஊழியர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். இதனால், வங்கி ஊழியர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

தேனா வங்கியில் உள்ள பங்குதாரர்களுக்கு 110 பங்குகள் வழங்கப்படும் என்று பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. அது போன்று, விஜயா வங்கி பங்குதாரர்களுக்கு அவர்கள் வைத்துள்ள ஒவ்வொரு 1,000 ஷேர்களுக்கும் 402 பங்குகள் வழங்கப்படும். இந்த இணைப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here