தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலானது!!!

ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், 
பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு விதித்துள்ள தடை, நேற்று அமலுக்கு வந்தது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்தத் தடையை, அரசு விடாப்பிடியாக அமல்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும், மாசை தவிர்க்கும் முயற்சியில், அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில், உணவகங்களில், ‘பார்சல்’ வழங்குவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, 12 பாரம்பரிய பொருட்களை, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அரசு அறிவித்தபடி, பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், ‘பிளாஸ்டிக் தடையை தள்ளி வைக்க வேண்டும்’ என, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த எதிர்ப்பை மீறி, அரசு தடையை அமல்படுத்தியது. இந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசு தவிர்க்கும் முயற்சிக்கு, வெற்றி கிடைத்துள்ளது.

அரசின் பிளாஸ்டிக் தடைக்கு, வியாபாரிகள் மற்றும் மக்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில்,
‘பிளாஸ்டிக் பைகளுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும், பொருட்கள் வாங்க, துணிப் பைகளை கொண்டு வரவும்’ என, எழுதி வைத்துள்ளனர்.

மளிகை கடைகளுக்கு, பொருட்கள் வாங்க செல்வோர், துணிப்பைகளை எடுத்து செல்ல துவங்கி உள்ளனர். பிளாஸ்டிக் மீதான தடையை, பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன. அரசுக்கு நன்றி தெரிவித்து, சென்னையில், ‘போஸ்டர்கள்’ ஒட்டப்பட்டுள்ளன.
நுாதன பிரசாரம் :

‘கண்ணீர் அஞ்சலி’ என்ற தலைப்பில், ‘பல ஆண்டுகளாக, நம் பூமியை அழித்து வந்த கேவலத்துக்குரிய பிளாஸ்டிக், டிச., 31 நள்ளிரவு, 11:59 மணிக்கு தலைமறைவானார். அண்ணாரின் இறுதி ஊர்வலம், தமிழகத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசுக்கு நன்றி’ என, போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், உள்ளாட்சி அதிகாரிகள், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். பல இடங்களில், வியாபாரிகள் தாமாக முன்வந்து, பிளாஸ்டிக் பைகளை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்தனர். உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. தடைக்கு, வரவேற்பு இருந்தபோதிலும், மாற்றுப் பொருட்கள், மக்களின் பயன்பாட்டுக்கு, அதிகம் வராதது, சிரமத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டல்களில் திணறல் :

ஓட்டல்களில், பார்சல் வாங்க வந்தவர்களுக்கு, சட்னி, சாம்பார் போன்றவற்றை வழங்க, சிரமப்பட்டனர். சில கடைகளில், பிளாஸ்டிக் பைகளையே பயன்படுத்தினர். இறைச்சி கடைகள், தின்பண்ட கடைகளில், பிளாஸ்டிக் பயன்படுத்துவது, நேற்றும் தொடர்ந்தது. ‘பொதுமக்கள் ஒத்துழைப்புடன், படிப்படியாக, பிளாஸ்டிக் பொருட்கள் தடை முழுமையாக அமல்படுத்தப்படும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாரியம் எச்சரிக்கை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, உற்பத்தி நிலையிலேயே தடுக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், 8,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து வந்தன. அரசு உத்தரவை ஏற்று, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியை கைவிட்டு, மாற்று உற்பத்தியை செய்ய, தொழிற்சாலைகள் முன்வர வேண்டும். அவ்வாறு முன்வராத தொழிற்சாலைகள், மீண்டும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்தால், தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்படும். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுக்க, ஒருங்கிணைந்த அபராத திட்டம், விரைவில் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here