நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது, சாலையின் நடுவே, கண்களுக்குக் குளிர்ச்சியான பல வண்ண மலர்ச் செடிகள், பச்சைப் பசேலென்ற காய்கள் மற்றும் இலைகளுடன் பூத்துக் குலுங்குவதை, நாம் கவனித்திருப்போம்.
அபோசைனேசி(Apocenaceae) தாவர குடும்பத்தைச் சேர்ந்த நீரியம் ஓலியண்டர் (Nerium oleander) என்ற அறிவியல் பெயர் கொண்ட நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி என இரு வகைகள் உள்ளன. இதன் மலர் மாலைகளைக் கோயில்களில் தெய்வங்களுக்கு மாலையாகப் பயன்படுத்துவதுண்டு.எல்லா பருவ நிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்கூடியது, செவ்வரளி. செவ்வரளிச் செடியின் மலர்கள், அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டவை. வீடுகளில் குழந்தைகள் தொடாத இடங்களிலும், தோட்டங்களிலும் அரளிச் செடிகளை வளர்க்கப்பட்டு வரப்படுகின்றன. காற்றுமாசு நீங்கி, சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். எளிய மணம் கமழும் அழகிய செவ்வரளி மலர்கள், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சீன மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தில், பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
செவ்வரளிச் செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றிலுள்ள மாசுகளை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். அதனால்தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், இவை வறட்சியையும் தாங்கும் தன்மை கொண்டவை. மண் அரிப்பையும் தாங்கும் தன்மை கொண்டவை. மேலும் வாகனங்கள் தரும் இரைச்சலையும் குறைத்து, சத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் படைத்தவை.நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுகள் அதிகமாக இருக்கும். இந்த நச்சுவாயு, காற்றை அசுத்தமாக்குவதுடன், சாலையில் பயணிப்போருக்கும் சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அதனால்தான் இதன் இலைகள் பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கறுப்பு நிறமாகவும் மாறி இருக்கும்.  எதிர்ப்புறம் உள்ள சாலைகளில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எதிர்வரும் வாகன ஓட்டிகளின்மீது படாமலும் தடுக்கின்றன. அந்த அளவுக்கு இலைகள் அடர்த்தி மிக்கவை. மேலும் இவற்றைப் பராமரிக்கும் செலவுகளும் குறைவாகத்தான் இருக்கும். விலங்குகள் இயற்கையாகவே இந்தத் தாவரத்தின் இலைகளை உண்ணாது என்பது இயற்கையின் விதி. அதனால் விலங்குகள் பாதிப்பிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். அழகோடு சேர்த்து இத்தனை வசதிகளும் இருப்பதால்தான் நிறைய நெடுஞ்சாலைகளில் இதைக் காணமுடிகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here