சம வேலைக்கு சம ஊதியம் என்கின்ற ஒன்றை கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை டி.பி.ஐ வளாகத்தில் அவர்களுடைய உண்ணாவிரத போராட்டமானது 5வது நாளாக தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வரக்கூடிய அவர்கள் அடிப்படை வசதி ஏதுமின்றி இங்கு கொட்டும் பனியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரம் உறங்குகின்றனர். டிபிஐ வளாகத்தில் தரையில் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 5வது நாளாக இங்கு போராடி வர கூடிய இடைநிலை ஆசிரியர்களில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் உடல்நல பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3000 க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் இங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். உடல் உபாதைகள் உள்பட தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்காதது அவர்களை மேலும் சோர்வடைய வைத்துள்ளது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்த பின்பாகவும் இங்கு வந்து ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தொடர்ச்சியாக 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டாலும் எந்தவொரு முடிவும் எட்டப்படாததால் அதிருப்தியில் உள்ளனர். இந்த போராட்டமானது சம வேலைக்கு சம ஊதியம் என்ற நிலையை பெற்றுவிட்டு தான் நிறைவு பெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு தரப்பில் இருந்து ஒரு உறுதியான உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும் அல்லது அரசாணைக்கான செயல்பாடுகள் குறித்து தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கின்றது. அரசு தரப்பில் இருந்து ஒரு உறுதியான முடிவு கிடைக்கும் வரை அவர்கள் போராட்டத்தை தொடர்வதாகவே தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here