#அறிவியல்-அறிவோம்

 

 

 

 
மலைகளில் உயரே செல்ல செல்ல குளிர் அதிகரிப்பது ஏன்?

நெருப்பின் அருகே நமது விரலைக் கொண்டு சென்றால், நம்மால் அவ்வெப்பத்தை உணர முடிகின்றது, இதுவே அந்த நெருப்பில் இருந்து நமது விரலை கொஞ்சம் கொஞ்சமாக விலத்தும் போது, அந்த வெப்பம் குறைந்துகொண்டு போகின்றது. இது இலகுவான இயற்பியல் ரீதியான லாஜிக். ஆனால், ஒன்று கவனித்து இருக்கின்றீர்களா? சூரியனும் ஒரு விதமான பெரும் நெருப்புத் தானே? நாம் மலைப்பிரதேசத்தில், அதாவது சூரியனுக்குக் கொஞ்சம் அண்மையில் இருக்கும் போது, நமக்குக் குளிராக இருக்கும், ஆனால் மலைப்பிரதேசத்தை விட்டுக் கீழ் நோக்கி செல்லும்போது, அதாவது சூரியனை விட்டு விலகும் போது, வெப்பம் அதிகரிக்கின்றதே, அது மட்டும் எப்படி? முதல் குறித்த உதாரணம் போல், நாம் மலைப் பிரதேசத்தில் இருந்து கீழ் நோக்கிச் செல்லும் போது குளிர் அதிகரிக்கத் தானே வேண்டும்?

மலையுச்சிகளில் நாம் ஏற ஏற, தட்பவெப்பநிலை மாறுவதற்கு முதன்மைக் காரணம் வளிமண்டல அழுத்தம் குறைந்துகொண்டே வருவதுதான். வளிமண்டல அழுத்தம் குறையக் குறைய வெப்பநிலையும் குறைந்துகொண்டே வரும். இப்படிக் குறையும் விகிதம் நாம் எதிர்பார்ப்பதைவிட மிக அதிகம். ஒவ்வொரு 100 மீட்டர் மேலே ஏறினால் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சட்டென்று குறைந்துவிடுகிறது.

வளிமண்டல அழுத்தம் குறைவு என்பது வேறொன்றுமில்லை. காற்று மூலக்கூறுகளின் அளவு குறைந்துகொண்டே போவதுதான் வளிமண்டல அழுத்தம் குறைவு. அதனால்தான் மலையுச்சிகளில் போகும்போது மக்கள் சுவாசிக்கக் கஷ்டப்படுகிறார்கள்.

எப்படி சமாளிக்கிறார்கள்?

வளிமண்டலத்தில் டிராபோபாஸ் (Tropopause) எனப்படும் பகுதி இருக்கிறது. இதுவே டிராபோஸ்பியர், ஸ்டிராட்டோஸ்பியர் ஆகிய வளிமண்டல அடுக்குகளுக்கு இடையிலான எல்லைப் பகுதி. பூமிக்கு 12 கி.மீக்கு மேல் உள்ள இந்தப் பகுதியில் மிக மிகக் குறைந்த அளவே வளிமண்டலம் இருக்கிறது. இந்த இடங்களில் எஞ்சியிருக்கும் வளிமண்டலத்தின் அளவு வெறும் 10 சதவீதம்தான். அதனால் இந்த இடங்களில் காற்றழுத்தம் மிக மோசமாகக் குறைந்துவிடுகிறது. அதனால் வெப்பநிலையும் கடுமையாகக் குறைகிறது. எவ்வளவு என்றால், மைனஸ் 55 டிகிரி செல்சியஸ்வரை.

அப்படியானால், இந்த உயரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி விமானத்தில் பயணிக்கிறார்களே, அவர்களுக்கு என்ன ஆகும்? நவீனத் தொழில்நுட்ப உதவி காரணமாக அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. விமான இன்ஜின்களில் காற்றழுத்தத்தை உருவாக்கும் இயந்திரம் வெளியிடும் காற்று, எரிபொருளுடன் கலப்பதற்கு முன்னதாக பயணிகளையும் விமானப் பணியாளர்களையும் சுற்றியுள்ள காற்றை வெப்பப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெப்பக் காற்று, விமானச் சுவர்களிடையே செய்யப்பட்டுள்ள வெப்பம் கடத்தும் திறன் தடுப்பு, மனித உடல் வெளிவிடும் வெப்பம் ஆகியவற்றின் மூலம் விமானத்துக்குள் மனிதர்களுக்கு உகந்த வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here