தமிழக அரசு மருத்துவக்  கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் 350 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ₹150 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த  பேட்டி:மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ₹1,264 கோடியில்  அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டிடம் கட்ட மண் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து  பணிகளும் முடிந்து விட்டது. தற்போது அதற்கான சுற்றுச்சுவர்  அமைக்கப்பட்டு  வருகிறது. விரைவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கும்.தமிழகத்தில் 2011 முதல் ஆயிரம் எம்பிபிஎஸ்  இடங்களும், 562 முதுநிலை படிப்புகளுக்கான இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்பில் 44 இடங்கள் இந்த ஆண்டு  அதிகரிக்க உள்ளது.

வரும் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரூர் அரசு மருத்துவ  கல்லூரியில் 150 இடங்கள், நெல்லை, மதுரை அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 100  இடங்கள் என மொத்தம் 350 இடங்கள் கூடுதலாக  கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்திய  மருத்துவ கவுன்சில் அனுமதியை பொறுத்து இந்த இடங்கள் விரைவாக கிடைக்கும் என  நம்புகிறேன். தமிழகம் முழுவதும் 1,834 மருத்துவ  பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி   முடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் நியமன பணிகள்  முடிக்கப்படும். பிற மாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு  மருத்துவ கழிவுகள் கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தமிழ்நாடு  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை சார்ந்தது என்றாலும், எந்த மாநிலத்தில்  இருந்து கழிவுகள்  வந்தாலும் அதை உரிய விதிப்படி அழிக்காமல் கொண்டு வந்தால்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here