பள்ளிகளில் இசை மற்றும் நடன ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் முயற்சி : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஒவ்வொரு பள்ளியிலும் இசை மற்றும் நடன ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்
மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பாக அரசு இசைப்பள்ளி கலை நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இந்த கலை நாள் விழாவில் திருநெல்வேலி, திருச்சி , திருவாரூர் , புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் , தூத்துக்குடி, கரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த இசைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உரையாற்றினார். அதில், ”இசைப்பள்ளி மற்றும் இசைக்கல்லூரி ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் நிரந்தரமான இசை ஆசிரியர்கள் , நடன ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முயன்று வருகிறது. இதன் மூலம் இசைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு நிலை உருவாக்கப்படும். மத்திய அரசு உதவியுடன் இயங்கி வரும் 40 ஜவகர் சிறுவர் மன்றத்திற்கான தலைமையகம் மயிலாப்பூரில் அமைக்கப்படும். கலை பண்பாட்டுத்துறையான இசைக் கல்லூரியில் உள்ள 126 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலை வாரியத்தில் தற்போது 33 ஆயிரம் பேர் உள்ளனர். அதை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது 320 கலைஞர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறோம் மேலும் வெளிநாடுகளுக்கு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர்களுக்கு நிதியுதவி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here