கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர் மறு நியமனத்துக்கு கட்டுப்பாடுகள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கான் கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: 
மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது. 
கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஆசிரியரின்றி மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அந்த ஆசிரியரின் பண்பு, நடத்தை திருப்தியாக இருந்தாலும், தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். 
உபரி ஆசிரியர் பணியிடங்கள்: உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தால் பணி நிறைவு செய்தவர்களை மறு நியமனம் செய்யக்கூடாது. மாணவர்களின் நலன் கருதி உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்களை மறுநிர்ணயம் செய்யும் போது, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மறுநியமனம் வழங்கப்படும். உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பெற்ற ஊதியத்தையே மறு நியமன ஊதியமாக வழங்க வேண்டும். 
உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும். 
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூட்டு மேலாண்மையில் இயங்கினால் அந்த நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்யவேண்டும். இந்த உபரி பணியிடங்களை மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியர் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ பணியில் சேர வேண்டும். 
வேறு பள்ளிக்குச் செல்ல மறுத்தால்… அரசு உதவி பெறும் பள்ளிகளில் மானியம் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய அந்தப் பள்ளி நிர்வாகம் மறுத்தால் அந்தப் பள்ளியின் மானியத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடத்துடன் பணிநிரவல் செய்து, தேவையுள்ள பள்ளிக்கு மாறுதல் அளித்து, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டபின், அந்த ஆசிரியர் பணி நிரவல் செய்த பள்ளிக்கு மாறுதலில் செல்ல மறுத்தால், அவ்வாறு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து உபரியாகப் பணிபுரிந்த நாள்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here