அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்புகளாக மாற்றப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
சிவகங்ககை மாவட்டம், திருப்புவனத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க. பாஸ்கரன், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ் விழாவில், பொது சுகாதாரம், பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 218 பயனாளிகளுக்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கிப் பேசியதாவது:
மானாமதுரை தொகுதிக்குள்பட்ட திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையை பொருத்தமட்டில், இதுவரை 200 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 200 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளை விட, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இனிவரும் கல்வியாண்டு முதல் நவீன முறை கற்பித்தலுடன், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன. மேலும், 1முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிதாக வண்ணச் சீருடைகளை அறிமுகப்படுத்தி, அதனை அரசே வழங்கும்.
பிப்ரவரி மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்புகளாக மாற்றப்படும்.
கல்வித் துறை மட்டுமின்றி, பிற துறைகளிலும் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதன்மையாகவும், முன்னோடியாகவும் திகழ்கிறது. தற்போது, தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்ற போதிலும், அண்மை காலமாக அரசையும், அரசின் திட்டங்களையும் குறை சொல்வதையே குறிக்கோளாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here